திடீரென தீப்பிடித்து எரிந்த கார்; சேலத்தைச் சேர்ந்த 9 பேர் உயிர் தப்பினர்

உடுமலையில் சாலையில் சென்று கொண்டிருந்த கார்  டயர் திடீரென வெடித்ததில் கார் முழுவதும் வியாழக்கிழமை தீப்பிடித்து எரிந்தது.

உடுமலையில் சாலையில் சென்று கொண்டிருந்த கார்  டயர் திடீரென வெடித்ததில் கார் முழுவதும் வியாழக்கிழமை தீப்பிடித்து எரிந்தது. காரில் பயணித்த சுற்றுலாப் பயணிகள் 9 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
  சேலம், காமராஜர் நகர் அம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சிவஞானம் (65). இவர் தனது குடும்பத்தார் உள்பட 8 பேருடன் கேரள மாநிலம்,  மூணாறுக்கு சுற்றுலா செல்வதற்காக சேலத்தில் இருந்து வியாழக்கிழமை காரில் புறப்பட்டுள்ளார். 
 அவரது  உறவினர்  வேல்முருகன் காரை ஓட்டி வந்தார்.
  வழியில்,   உடுமலை, ஏரிப்பாளையம் பகுதியில் கார் சென்றுகொண்டிருந்தபோது அதன் டயர் திடீரென வெடித்தது. இதில் நிலைதடுமாறிய கார் அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இதைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் கவிழ்ந்து கிடந்த காரை நிமிர்த்தி, அதில் இருந்தவர்களை மீட்டனர். இவ்விபத்தில்  சிவஞானம் (65),  மகேஸ்வரி (69), வேல்முருகன் (44), பூங்கொடி (35),  சண்முகவடிவு (36), அங்குராஜ் (40), ரோஹித் சிவா (7),  ஸ்ரீ ஹரிணி (11),  சுருதி (7) ஆகிய 9 பேர் சிறுகாயத்துடன் உயிர் தப்பினர்.
  இந்நிலையில்,  காரில் இருந்து அனைவரும் வெளியேற்றப்பட்ட  சிறிது நேரத்தில் கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தகவல் கிடைத்து சம்பவ இடத்துக்குச் சென்ற தீயணைப்புப் படையினர் காரில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர்.  தீ விபத்தில் கார் முற்றிலும் எரிந்து நாசமானது. காயமடைந்தவர்கள் அனைவரும் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
  இந்த சம்பவம் குறித்து உடுமலை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.   
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com