வீடு புகுந்து மூதாட்டியிடம்  நகைப் பறிப்பு: இளைஞர் கைது

திருப்பூரில் வீடு புகுந்து மூதாட்டியிடம் கத்தி முனையில் 10 பவுன் தங்க நகைகளைப் பறித்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

திருப்பூரில் வீடு புகுந்து மூதாட்டியிடம் கத்தி முனையில் 10 பவுன் தங்க நகைகளைப் பறித்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
திருப்பூர், மத்திய காவல் எல்லைக்கு உள்பட்ட ஏ.பி.டி. சாலை பகுதியைச் சேர்ந்தவர் அருக்காணி (71). இவரது மகன், மகள் இருவரும் திருமணமாகி, வெவ்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனர்.
செவ்வாய்க்கிழமை காலை அருக்காணி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது திடீரென அவரது வீட்டுக்குள் புகுந்த இளைஞர் ஒருவர், கத்தியைக் காட்டி மிரட்டி, அருக்காணி அணிந்திருந்த 10 பவுன் தங்க நகைகளைப் பறித்துள்ளார்.
பிறகு, வீட்டிலிருந்த இருக்கையில் அருக்காணியை அமர வைத்து, அவரது சேலையின் ஒரு பகுதியால் கட்டிப் போட்டுள்ளார். அதற்குப் பிறகு, பீரோ உள்ளிட்ட இடங்களில் பணம், நகைகள் இருக்கிறதா என்று தேடியுள்ளார்.
அதற்குள் லாவகமாக கட்டை அவிழ்த்த அருக்காணி,  வீட்டின் பின்வாசல் வழியாகத் தப்பினார். அதைக் கவனித்த அந்த நபரும் முன்வாசல் வழியாகத் தப்பியோடினார்.
சிறிது நேரத்தில் அருக்காணி கூறிய தகவலை அடுத்து, சம்பவ இடத்தில்  மக்கள் கூடினர். இதுகுறித்து மத்திய காவல்நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸார் விசாரணை நடத்தினர். 
சம்பவம் நடந்த வீட்டின் அருகில் உள்ள வீடுகள், அலுவலகங்களில் சாலை நோக்கி வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகள் சேகரிக்கப்பட்டன. இதில், அருக்காணியின் வீட்டிற்குள் புகுந்த நபரின் படம் தெளிவாகக் கிடைத்தது.
அதைக் கொண்டு விசாரணை நடத்திய போலீஸார், செவ்வாய்க்கிழமை மாலை  அந்த இளைஞரைப் பிடித்தனர். விசாரணையில், அவர் விருதுநகரைச் சேர்ந்த நந்தகுமார் (27) என்பது தெரிய வந்தது. அவரிடமிருந்து நகைகள் மீட்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com