திருப்பூர் மாவட்டத்தில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பொதுத் தேர்வு எழுதுகின்றனர்

திருப்பூர் மாவட்டத்தில் நிகழாண்டில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பொதுத் தேர்வை எழுத உள்ளனர். 

திருப்பூர் மாவட்டத்தில் நிகழாண்டில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பொதுத் தேர்வை எழுத உள்ளனர். 
திருப்பூர் மாவட்டதேர்வுக்குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  நடைபெற்றது. 
கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி தலைமை வகித்தார். முதன்மைக் கல்விஅலுவலர் எஸ்.சாந்தி முன்னிலை வகித்தார்.
மாவட்டவருவாய் அலுவலர் ச.பிரசன்ன ராமசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இ.எஸ்.உமா, மாநகராட்சி ஆணையர் மா.அசோகன், திருப்பூர், தாராபுரம், உடுமலைப்பேட்டை சரக காவல் துணைக் கண்காணிப்பாளர்கள், ஆய்வுக் குழு அலுவலர்கள், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் அலுவலக அதிகாரிகள், மின்வாரிய அதிகாரிகள், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி பேசியதாவது:
தமிழ்நாடு அரசு தேர்வுத் துறையால் நடத்தப்படும் பிளஸ் 2 பொதுத் தேர்வு வரும் மார்ச் முதல் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ஆம் தேதி வரையிலும், 11-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 7-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 16-ஆம் தேதி வரையிலும், 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 16-ஆம் தேதி முதல் ஏப்ரல்  20-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
பிளஸ் 1 பொதுத் தேர்வை திருப்பூர் மாவட்டத்தில் 77 தேர்வு மையங்களில் 204 மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 11,545 மாணவர்களும், 13,843 மாணவிகளும் சேர்த்து 25,388 பேரும், தனித் தேர்வர்களாக 45 மாணவ, மாணவிகளும் ஆக மொத்தம் 25,433 பேர் தேர்வெழுத உள்ளனர்.
 பிளஸ் 2 பொதுத் தேர்வை மாவட்டத்தில் 77 தேர்வு மையங்களில் 198 மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 11,212மாணவர்களும், 13,607 மாணவிகள் சேர்த்து மொத்தம் 24,819 பேரும், தனித் தேர்வர்களாக 983 மாணவ, மாணவிகள் சேர்த்து மொத்தம் 25,802 பேரும் எழுத உள்ளனர்.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை 92 தேர்வு மையங்களில் 336 பள்ளிகளில் பயிலும் 14,326 மாணவர்களும், 14,455 மாணவிகளும் சேர்த்து 28,781 பேரும், தனித் தேர்வர்களாக 913 பேரை சேர்த்து மொத்தம் 29,694 பேர்  எழுத உள்ளனர்.
தனிப்படைகள்  அமைப்பு: பொதுத் தேர்வுக்காக 6 இடங்களில் வினாத்தாள் கட்டுக் காப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக் காப்பகங்கள் 24 மணிநேரமும் ஆயுதம் தாங்கிய காவலர்கள் பாதுகாப்பில் பராமரிக்கப்படும்.
மேல்நிலை பொதுத் தேர்வு மையங்களில் பணியாற்ற முதன்மைக் கண்காணிப்பாளர்களாக 77 தலைமை ஆசிரியர்களும், துறை அலுவலர், கூடுதல் துறை அலுவலர்களாக 87 ஆசிரியர்களும், அறைக் கண்காணிப்பாளர்களாகப் பணியாற்ற 1,504 ஆசிரியர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மையங்களில் பணியாற்ற முதன்மைக் கண்காணிப்பாளர்களாக 92 தலைமை ஆசிரியர்களும், துறை அலுவலர், கூடுதல் துறை அலுவலர்களாக 102 ஆசிரியர்களும், அறைக் கண்காணிப்பாளர்களாகப் பணியாற்ற 1440 ஆசிரியர்களும் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
தேர்வுகளில் முறைகேடுகள் செய்தல், காப்பியடித்தல் மற்றும் ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடுதல் முதலியவற்றைக் கண்காணிப்பதற்கு பறக்கும் படைகள் அமைக்கப்படுகின்றன. 
பறக்கும் படையினர் தேர்வு மையங்களை எந்த நேரத்திலும் திடீரெனப் பார்வையிட்டு, ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடுவோர் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்வர்.
மேல்நிலை பொதுத் தேர்வுக்காக முதன்மைக் கல்வி அலுவலர் மூலமாக 150 ஆசிரியர்களைக் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட உள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு மாவட்டக் கல்வி அலுவலர் மூலமாக  200 ஆசிரியர்களைக் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட உள்ளது.
தேர்வு மையங்களில்  தேர்வுகளைப்  பார்வையிடும் அதிகாரிகள், பறக்கும் படையினர் தங்கள் குறிப்புகளை, ஆலோசனைகளைப் பதிவு செய்ய பதிவேடு வைக்கப்படும்.  ஒவ்வொரு தேர்வு மையத்திலும் புகார் மற்றும் ஆலோசனைப் பெட்டியும்  வைக்கப்படும்.
பொதுத் தேர்வு நடைபெறும் நாள்களில் பேருந்தில் பயணம் செய்யும் மாணவ, மாணவியர் இலவச பேருந்து அடையாள அட்டையை தம்முடன் எடுத்து வராவிட்டாலும், சீருடை அணிந்து வரும் மாணவ, மாணவியரை பேருந்தில் பயணம் செய்ய அனுமதிக்குமாறு பேருந்து நடத்துநர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
தனித் தேர்வு மையங்களுக்கு தேர்வு எழுத வரும் மாணவ, மாணவிகளுக்கு காவல் துறை கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும். தேர்வுப் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் ஆழ்ந்த கவனத்துடன், மிகவும் முன் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com