திருப்பூரில் மது விலக்குப் பிரிவு காவலர் தற்கொலை

திருப்பூரில் குடும்பப் பிரச்னை காரணமாக மது விலக்குப் பிரிவுக் காவலர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

திருப்பூரில் குடும்பப் பிரச்னை காரணமாக மது விலக்குப் பிரிவுக் காவலர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீஸார் கூறியது:
சேலம் மாவட்டம், மேட்டூர், அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் எம்.சதீஷ்குமார் (34). இவர், கடந்த 2008-ஆம் ஆண்டு காவல் துறையில் பணியில் சேர்ந்தார். கடந்த 7 ஆண்டுகளாக திருப்பூர் மாநகரக் காவல் துறையிலும், கடந்த 6 மாதங்களாக மாநகர மது விலக்குப் பிரிவிலும் காவலராகப் பணி புரிந்து வந்தார். இவரது மனைவி விஷ்ணுதேவி (27). இவர்களுக்கு  6 வயதில் மகளும், இரண்டரை வயதில் மகனும் உள்ளனர். திருப்பூரில், சாமுண்டிபுரம் அருகே உள்ள திருநீலகண்டர் வீதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
இந்நிலையில், பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊரான மேட்டூருக்குச் செல்ல சதீஷ்குமாரும், விஷ்ணுதேவியும் முடிவு செய்துள்ளனர். இதில், தனது தாய் வீட்டுக்கு முதலில் செல்லலாம் என்று சதீஷ்குமார் கூறினாராம். விஷ்ணுதேவியோ தனது தாய் வீட்டுக்கு முதலில் செல்ல வேண்டும் என்று தெரிவித்தாராம். 
இதுதொடர்பாக, இருவருக்கும் ஜனவரி 13-ஆம் தேதி இரவு கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, பொங்கலுக்கு ஊருக்குச் செல்லவே வேண்டாம் என்று அவர்கள் முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, அறையைப் பூட்டி விட்டு சதீஷ்குமார் உள்ளே தூங்கச் சென்றுள்ளார். ஞாயிற்றுக்கிழமை காலை நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால், விஷ்ணுதேவி கதவைத் தட்டிக் கூப்பிட்டு உள்ளார். ஆனால்,  பதில் எதுவும் வராத காரணத்தால் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.  
அப்போது, அங்கு சதீஷ்குமார் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்துகிடந்துள்ளார். 
தகவலறிந்து 15-வேலம்பாளையம் போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று, சதீஷ்குமாரின் உடலை மீட்டுப் பரிசோதனைக்கு திருப்பூர் அரசுத் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com