80 அடியை எட்டியது அமராவதி அணை:  ஓரிரு நாளில் பாசனத்துக்குத் தண்ணீர் திறக்க வாய்ப்பு

தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் 90 அடி உயரமுள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை

தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் 90 அடி உயரமுள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை 80 அடியை எட்டியது. ஓரிரு நாள்களில் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படும் என்று பொதுப்பணித் துறையினர் அறிவித்துள்ளனர்.
உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள 55,000 ஏக்கர் பழைய,  புதிய ஆயக்கட்டு நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.  நூற்றுக்கணக்கான கரையோரக் கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் இந்த அணை விளங்குகிறது. 
ஜூன் மாதத் தொடக்கத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதன் காரணமாக அணையின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளான பாம்பாறு, சின்னாறு, தேனாறு ஆகிய ஆறுகளில் நீர்வரத்து ஏற்பட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்ததைத் தொடர்ந்து ஜூன் இரண்டாவது வாரத்தில் பாசனத்துக்காகவும், குடிநீர்த் தேவைக்காகவும் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. 
இந்நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் சில நாள்களாக அணைக்கு நீர்வரத்து சுமார் 3,000 அடியாக இருந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. 
ஜூலை 9ஆம் தேதி 55 அடியாக இருந்த நீர்மட்டம் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 20 அடி உயர்ந்துள்ளது. 90 அடி உயரமுள்ள அணையில் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி நிலவரப்படி 76.77 அடியாக இருந்தது. ஞாயிற்றுக்கிழமை மாலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 80 அடியை எட்டியது. கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை நல்ல முறையில் பெய்து வருவதால் அணைக்கு மேலும் உள்வரத்து அதிகரிக்கும் சூழ்நிலை நிலவுவதால், ஒருசில நாள்களில் அணை முழுக் கொள்ளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:ஆண்டுதோறும் ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கும், ஜூலை மூன்றாவது வாரத்தில் புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கும் அணையைத் திறந்து விடுவது வழக்கம். இந்த ஆண்டில் தென்மேற்குப் பருவமழை நல்ல முறையில் பெய்துள்ளது. ஆகையால் உடனடியாக பழைய, புதிய ஆயக்கட்டு பாசனங்களுக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்றனர்.
பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறியதாவது: நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் நல்ல மழை பெய்து வருவதால் விரைவில் அணை முழுக் கொள்ளளவை எட்ட உள்ளது. ஆகையால் பழைய, புதிய ஆயக்கட்டு பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விட தமிழக அரசு க்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாளில் அணை திறக்கப்படும் என்றனர். 
அணை நிலவரம்: ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி நிலவரப்படி, 90 அடி உயரமுள்ள அமராவதி அணையில் 76.77 அடி நீர்மட்டமாக இருந்தது. 4,035 மில்லியன் கன அடி கொள்ளவு கொண்ட அணையில் 2913.74 மில்லியன் கனஅடி  நீர் இருப்பு உள்ளது. அணைக்கு  3,883 கனஅடி நீர் வரத்து இருந்தது. அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றம் இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com