வங்கதேசத்திலிருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஆடைகளுக்கு வரையறை நிர்ணயம் செய்ய வேண்டும்: மத்திய அரசுக்கு சிஸ்மா கோரிக்கை

வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஆயத்த ஆடைகளுக்கு வரையறை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று

வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஆயத்த ஆடைகளுக்கு வரையறை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று தென்னிந்திய காலர் சர்ட் மற்றும் உள்ளாடை சிறுதொழில் முனைவோர் சங்கம் (சிஸ்மா) கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து   மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கு சிஸ்மா பொதுச் செயலாளர் கே.எஸ்.பாபுஜி எழுதியுள்ள கடித விவரம்: 
கடந்த சில ஆண்டுகளாக ஆயத்த ஆடை இறக்குமதி அதிகரிப்பால், பின்னலாடை, ஜவுளி வர்த்தகம் உள்நாட்டுச் சந்தையில் குறைந்து வருகிறது. 
ஆயத்த ஆடை தயாரிப்பில் இந்தியா முழுவதும் உள்ள பல மாநிலங்களில் தொழில் துறையினர் முனைப்பு காட்டி வருகின்றனர். ஆனால், வர்த்தக சரிவால் பல பின்னலாடை நிறுவனங்கள் நலிவடைந்துள்ளன.
பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி. வருகைக்குப் பின்னர் தற்கொலைகள் அதிகரித்துள்ளன என்பதை அரசு கணக்கில் கொள்ள வேண்டும். இந்தியா, வங்கதேசத்துடன் கடந்த 2006-ஆம் ஆண்டு ஏற்படுத்திய ஒப்பந்தத்தின்படி, வங்கதேசம் அனைத்து ஆயத்த ஆடை மற்றும் ஜவுளி ரகங்களையும் வரியில்லாமல் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.
சமீப நாள்களில் வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு வரையறை இல்லாமல் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. இதனால் நேரடியாக வங்கதேசம் பலனடைந்தாலும், மறைமுகமாக சீன வர்த்தகம் பலனடைந்து வருகிறது. வங்கதேசத்தில் தயாரிக்கும் ஆயத்த ஆடைகளுக்கு தேவையான நூல் மற்றும் துணி வகைகள்  சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இதனால் சீனா மறைமுகமாக இந்திய ஜவுளிச் சந்தையைக் கைப்பற்றி வருகிறது.
வங்கதேசத்தின் ஆயத்த ஆடை வரவால் நம் நாட்டின் முக்கிய வர்த்தகச் சந்தை சரிவடைந்து, பல்வேறு பிரச்னைகளில் சிக்கி, தொழில் துறையினர் தவித்து வருகின்றனர்.
இதுகுறித்து ஆய்வுக்குழு ஒன்றை அமைத்து, திருப்பூர் போன்ற தொழில் மாவட்டங்களில், தொழில் வளர்ச்சிக்கு என்ன தேவை என்பதை அறிந்து, இக்குழு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
வர்த்தக சுழற்சி முறையைக் கணக்கிட்டு, வளர்ச்சிப் பாதைக்கு வழிவகை செய்ய, நடைபெறவுள்ள ஜி.எஸ்.டி. குழுக் கூட்டத்தில் ரூ. 200 முதல் ரூ. 500 வரை விலையிலான பின்னலாடைகளுக்கு வரிவிலக்கு அளித்து, வர்த்தக ரீதியான வளர்ச்சிப் பாதைக்கு மத்திய அரசு வழிவகை செய்ய வேண்டும். வங்கதேசத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் ஆயத்த ஆடைகளுக்கு வரையறை நிர்ணயம் செய்ய வேண்டும் என பின்னலாடைத் துறை சார்பாகவும், சிறு, குறு மற்றும்  நடுத்தரத் தொழில் துறை சார்பாகவும் கேட்டுக் கொள்கிறோம் என அதில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com