திருப்பூரில் சிறுபான்மையின மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம்

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர்

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை சார்பில் சிறுபான்மையின மக்களுடனான கருத்துக் கேட்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
 இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி முன்னிலையில் வகித்தார். இதில், சிறுபான்மையினர் நலத் துறை இயக்குநர் பா. வள்ளலார் தலைமை வகித்துப் பேசியதாவது:
தமிழக அரசின் சார்பில் சிறுபான்மையின மக்களின் வளர்ச்சிக்காகவும், முன்னேற்றத்துக்காகவும் எண்ணற்ற பல திட்டங்கள் சிறப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. முஸ்லிம் இன மக்கள் புனித யாத்திரை செல்வதற்கு ஏற்கெனவே வழங்கப்பட்டு வந்த நிர்வாக செலவுக்கான மானியம் ரூ. 20 லட்சத்தில் இருந்து ரூ. 30 லட்சமாக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. பள்ளி வாசல்கள், தர்காக்கள், மதரஸாக்கள் போன்ற வக்பு வாரியங்களின் பழுது பார்ப்பு மற்றும் சீரமைப்பு, மறு கட்டுமானப் பணிகளுக்காக அதிகப்படியான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
 மாணவ, மாணவிகளின் கல்வி வளர்ச்சிக்காக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11, 12ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள், கல்வி உபகரணங்கள் மற்றும் விலையில்லா மடிக்கணினிகள், கல்வி உதவித் தொகை ஆகியவை  வழங்கப்பட்டு வருகின்றன.  மேலும், சிறுபான்மையின மக்கள் பொருளாதார அளவில் மேம்பாடு அடையும் வகையில் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் மற்றும் புத்த மதத்தினர் ஆகியோருக்கும் பல்வேறு வகையான கடன் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. 
 சிறுபான்மை மக்கள் சுய உதவிக் குழுக்கள் அமைத்து தனித்தனியாகவோ அல்லது கூட்டாகவோ சிறு வியாபாரம், சிறுதொழில் செய்து தங்களது வருமானத்தைப் பெருக்கிக் கொள்ள டாம்கோ திட்டத்தின் கீழ் ஒரு நபருக்கு ரூ. 50,000க்கும் மிகாமல் கடன் வழங்கப்பட்டு வருகிறது. 
 இதுபோல சிறுபான்மையின சமூக மக்களின் மேம்பாட்டுக்காக மத்திய, மாநில அரசால்  அளிக்கப்படும் எண்ணற்ற பல திட்டங்களைப் பெற்றுப் பயனடையவேண்டும் என்றார். 
மேலும், சிறுபான்மையின மக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெறப்பட்ட மனுக்கள் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள சிறுபான்மையினர் நலத் துறை இயக்குநர் அறிவுறுத்தினார். 
அதைத் தொடர்ந்து, முதியோர் உதவித் தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகை, ஆதரவற்றோர் விதவை உதவித் தொகை, கல்வி உதவித் தொகை, விலையில்லா தையல் இயந்திரங்கள் என 13 பயனாளிகளுக்கு ரூ. 81,425 மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. 
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ச.பிரசன்ன ராமசாமி, ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர்  ரமேஷ்குமார், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் பாபு ராபர்ட் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com