முழுக் கொள்ளளவை எட்டும் நிலையில் அமராவதி அணை: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் பலத்த மழையால் திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே உள்ள

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் பலத்த மழையால் திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே உள்ள அமராவதி அணை முழுக் கொள்ளளவை எட்டும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பொதுப் பணித் துறையினர் தெரிவித்துள்ளனர்.
உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் மூலமாக திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள 55 ஆயிரம் ஏக்கர் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. மேலும், நூற்றுக்கணக்கான கரையோர கிராமங்களின் குடிநீர்த் தேவையும் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த ஜூலை 16, ஆகஸ்ட் 8ஆம் தேதி என இரண்டு முறை அணை முழுக் கொள்ளளவை எட்டும் நிலை ஏற்பட்டது. அப்போது அணையில் இருந்து தொடர்ந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இருப்பினும் கடந்த சில மாதங்களாக அணையின் நீர் இருப்பு முழுக் கொள்ளளவிலேயே இருந்து வந்தது. இதனால் கரூர் வரையில் பழைய, புதிய ஆயக்கட்டு பாசனப் பகுதிகளுக்கும் தாராளமாகத் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. 
அமராவதி அணையில் இருந்து அதன்பின் செப்டம்பர் 20ஆம் தேதி பாசனத்துக்காகத் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் 70 அடிக்கும் கீழாகச் சென்றுவிட்டது. 
இந்நிலையில், கஜா புயல் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை இரவு முதல் விடியவிடிய பலத்த மழை பெய்யத் தொடங்கியது. குறிப்பாக வெள்ளிக்கிழமை அதிகாலை அணைக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில், அது மாலையில் 18 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது. 
இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வந்தது. மேலும், வெள்ளிக்கிழமை மாலை 5 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 82 அடியாக உயர்ந்தது. இதனால் விரைவில் அணை முழுக் கொள்ளளவை எட்டும் நிலை ஏற்பட்டுள்ளது. 
இதையடுத்து, பொதுப் பணித் துறையினர் 24 மணி நேரக் கண்காணிப்பு மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து பொதுப் பணித் துறையினர் கூறியதாவது:
தொடர்ந்து பெய்து வரும் மழையால் அணை முழுக் கொள்ளளவை எட்டும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அணையில் இருந்து சனிக்கிழமை உபரிநீர் திறந்துவிடப்படும். இதையடுத்து, கரையோர மக்களுக்கு முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com