மூலனூர் அருகே நிதி நிறுவன அதிபரைக் கடத்திய கும்பல் கைது

வெள்ளக்கோவிலை அடுத்துள்ள மூலனூர் அருகே நிதி நிறுவன அதிபரைக் கடத்திய கும்பலைக் காவல் துறையினர் புதன்கிழமை இரவு கைது செய்தனர்.

வெள்ளக்கோவிலை அடுத்துள்ள மூலனூர் அருகே நிதி நிறுவன அதிபரைக் கடத்திய கும்பலைக் காவல் துறையினர் புதன்கிழமை இரவு கைது செய்தனர்.
 திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம், அத்தப்பம்பட்டியைச் சேர்ந்தவர் பிச்சைமுத்து (60). நிதி நிறுவன அதிபர். இவர், கோவை காந்திபுரம் அலமு நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
 இவரும், ஒட்டன்சத்திரம், காளீஸ்வரன் நகரைச் சேர்ந்த செல்வம், ராமசாமி ஆகிய மூன்று பேரும் சேர்ந்து மும்பை மற்றும் மங்களூருவில் நிதி நிறுவனம் நடத்தி வந்தனர். அதில் அவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டதால் மற்ற இருவரும் பிச்சைமுத்துவை நிதி நிறுவனத்தில் இருந்து நீக்கி விட்டனராம்.
 இதையடுத்து, பிச்சைமுத்து தரவேண்டிய பாக்கித் தொகையை பலமுறை கேட்டும் அவர் இழுத்தடித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக மூலனூர் வந்த பிச்சைமுத்து, தனது உறவினர் குப்புசாமியுடன் மீண்டும் கோவைக்கு நவம்பர் 10ஆம் தேதி காரில் திரும்பிச் சென்றுகொண்டிருந்தார். 
 கோவையைச் சேர்ந்த செந்தில்குமார் (46) காரை ஓட்டிச் சென்றார். அவர்கள் சென்ற கார் மூலனூர் - தாராபுரம் சாலை, சென்னாக்கல்வலசு பிரிவு அருகே சென்றுகொண்டிருந்தபோது மற்றொரு காரில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் பிச்சைமுத்துவின் காரை வழிமறித்து 
நிறுத்தியது. 
 பின்னர் அந்த கும்பல் பிச்சைமுத்துவை மட்டும் தங்கள் காரில் கடத்திச் சென்றது. இச்சம்பவம் குறித்து குப்புசாமியும், ஓட்டுநர் செந்தில்குமாரும் மூலனூர் காவல் ஆய்வாளர் வனிதாமணியிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில், மூலனூரை அடுத்த மார்க்கம்பட்டி, கம்மங்கரை அருகே காவல் துறையினர் நடத்திய வாகனச் சோதனையில் ஒரு கார் பிடிபட்டது. அதில், இருந்த பிச்சைமுத்து மீட்கப்பட்டார். 
இதையடுத்து நடைபெற்ற விசாரணையைத் தொடர்ந்து, பிச்சைமுத்துவைக் கடத்திச் சென்ற அவரது நிதி நிறுவன முன்னாள் பங்குதாரர் செல்வம் மற்றும் மதுரை உத்தமநாயக்கனூர் ஜெயம் (49), உசிலம்பட்டி பாறைப்பட்டி ராஜவடிவேல் (23),  கம்பம் சுருளிப்பட்டி ஜெயகுமார் (34) ஆகிய நான்கு பேருரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.
 கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டது. 
பின்னர், நான்கு பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com