பல்லடத்தில் சமுதாய வளைகாப்பு விழா

பல்லடத்தில் சமுதாய வளைகாப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.  

பல்லடத்தில் சமுதாய வளைகாப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.  
சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப் பணிகள் சார்பில் நடைபெற்ற இந்த விழாவுக்கு,  பல்லடம் சட்டப் பேரவை உறுப்பினர் கரைப்புதூர் ஏ.நடராஜன் முன்னிலை வகித்தார். சமுதாய வளைகாப்பு நிகழ்வை நடத்தி வைத்து மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி பேசியதாவது:  
தமிழக அரசு பெண்களின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்துக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கர்ப்பிணிகள் தங்களையும்,  கருவில் வளரும் குழந்தையின் உடல் ஆரோக்கியத்தையும் பாதுகாக்க முழுமையான மருத்துவ பரிசோதனை, மகப்பேறு நிதியுதவி உள்ளிட்டவை அரசால் வழங்கப்படுகிறது.  கர்ப்பிணிகள் கருவுற்ற நாள் முதல் முறையான மருத்துவ பரிசோதனை செய்து உரிய தடுப்பூசிகளை போட்டு சத்தான உணவுகளை உட்கொண்டு நல்ல ஆரோக்கியமான குழந்தையை பெற வேண்டும் என்றார். 
இந்நிகழ்ச்சியில் 230 கர்ப்பிணிகள் பங்கேற்றனர்.
இதில், மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் மலர்விழி, மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் ஜெயந்தி, வட்டாட்சியர் அருணா, கூட்டுறவு வங்கித் தலைவர் ஏ.சித்துராஜ் உள்பட பலர் பங்கேற்றனர். 
வெள்ளக்கோவில்...: வெள்ளக்கோவிலில் 120 கர்ப்பிணிகளுக்கு தமிழக அரசு சார்பில் சமுதாய வளைகாப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
 ஸ்ரீ வீரக்குமார சுவாமி கோயில் குலத்தவர்கள் மண்டபத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, வட்டார குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் சூரியா தலைமை வகித்தார். நிலவள வங்கித் தலைவர் எஸ்.என்.முத்துக்குமார், நகராட்சி முன்னாள் தலைவர் வி.கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
 விழாவில், ஒன்றியப் பகுதியைச் சேர்ந்த 120 கர்ப்பிணிகளுக்கு நகராட்சி முன்னாள் தலைவர் சாந்தி, முன்னாள் கவுன்சிலர் முத்துலட்சுமி ஆகியோர் வளையல் அணிவித்தனர். மங்கலப் பொருள்கள், மஞ்சள் கயிறு, பழ வகைகள் வழங்கப்பட்டன. மேலும் குழந்தை வளர்ப்பு குறித்த புத்தகங்களும் வழங்கப்பட்டன. 
 வட்டார குழந்தைகள் நலத்திட்ட மேற்பார்வையாளர் அன்னபூரணி, அரசு சுகாதார நிலையப் பணியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com