வேளாண்மைத் துறை சார்பில் கோவிந்தாபுரத்தில் விழிப்புணர்வு முகாம்

தாராபுரம் வட்டார வேளாண்மைத் துறை சார்பில் கோவிந்தாபுரத்தில் மக்காச்சோளப் பயிரில் படைப்புழு

தாராபுரம் வட்டார வேளாண்மைத் துறை சார்பில் கோவிந்தாபுரத்தில் மக்காச்சோளப் பயிரில் படைப்புழு தாக்குதல் குறித்த விழிப்புணர்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
முகாமுக்கு, தாராபுரம் வட்டார வேளான்மை உதவி இயக்குநர் எஸ்.எம்.ஞானசேகரன் தலைமை வகித்தார். வாகரை மக்காச்சோள ஆராய்ச்சி நிலைய பூச்சியியல் துறை பேராசிரியர் அறிவுடைநம்பி முன்னிலை வகித்தார். 
நெற்பயிருக்கு அடுத்த முக்கிய பயிராக மக்காச்சோளம் சாகுபடி செய்யப்படுகிறது. இப்பயிரில் சமீப காலமாக ராணுவப்படை புழு என்ற புதிய வகை புழுவின் தாக்குதல் காணப்படுகிறது. தாராபுரம் வட்டாரத்தில் கோவிந்தாபுரம், சத்திரம், பொன்னாபுரம் உள்பட கிராமங்களில் பரவலாக காணப்படுகிறது. இதனைக் கட்டுப்படுத்த தாய்ப்பூச்சிகளைக் கண்காணிக்க விளக்கு பொறி பயன்படுத்த வேண்டும். முட்டைகளை அழிக்க முட்டை ஒட்டுண்ணிகளை பயன்படுத்த வேண்டும். கூட்டுப் புழுக்களை கட்டுப்படுத்த கோடை உழவு செய்ய வேண்டும். புழுக்களைக் கட்டுப்படுத்த பச்சரிசி தவுடு, நாட்டுச்சக்கரையுடன் விஷமருந்து கலந்து குருத்துகளில் இடுதல் வேண்டும்.
வயலை சுற்றியும் களைகள் இல்லாமல் மேலாண்மை செய்ய வேண்டும். வேளாண்மை துறை சிபாரிசுபடி ரசாயன மருந்துகள் தெளித்தல் வேண்டும் என முகாமில் விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. 
முகாமில், கோவிந்தாபுரம், சத்திரம், பொன்னாபுரம் கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கலந்துகொண்டனர். முகாமுக்கான ஏற்பாடுகளை அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஹ.விஜய் ஆனந்த் தலைமையில் உதவி தொழில்நுட்ப மேலாளர் கோ.சங்கர் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com