காட்டுப் பன்றிகளால் தொல்லை: வனத் துறையிடம் விவசாயிகள் புகார்

பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்தக் கோரி வனத் துறையினரிடம் விவசாயிகள் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனர்.

பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்தக் கோரி வனத் துறையினரிடம் விவசாயிகள் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனர்.
உடுமலை வட்டம், திருமூர்த்தி நகருக்கு உள்பட்ட பொன்னாலம்மன் சோலை பகுதியில் உள்ள விளை நிலங்களில் தென்னை, மா, மக்காச்சோளம், காய்கறிகள் மற்றும் தீவனப் பயிர்கள் அதிக அளவில் பயிரிடப்பட்டுள்ளன. இந்நிலையில் இப் பகுதியில் உள்ள விளை நிலங்களில் காட்டுப் பன்றிகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. மேலும், விவசாய பணிகளின்போது விவசாயிகள் மற்றும் கால்நடைகளை காட்டுப் பன்றிகள் தாக்கி வருகின்றன. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 
இது தொடர்பாக வனத் துறையினர் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 
இதையடுத்து உடுமலையில் உள்ள மாவட்ட வன அலுவலகத்துக்குச் சென்று விவசாயிகள் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனர். அதில், மற்ற மாநிலங்களில் உள்ளதுபோல் காட்டுப் பன்றிகளை வனவிலங்கு பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரம் வரை வந்து விவசாய நிலங்களில் புகுந்து காட்டுப் பன்றிகள் பெரும் சேதத்தை விளைவித்து வருகின்றன. எனவே, காட்டுப் பன்றிகளை வன எல்லையை தாண்டி வராமல் இருக்கும் வகையில் அகழி மற்றும் வேலி அமைத்துக் கொடுத்து விவசாயிகள், பொதுமக்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com