மஞ்சள், பருத்திக்கு பயிர்க் கடன் விரைந்து வழங்க வேண்டும்: விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தல்

மஞ்சள், பருத்திக்கு பயிர்க் கடன்களை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
மஞ்சள், பருத்திக்கு பயிர்க் கடன் விரைந்து வழங்க வேண்டும்: விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தல்

மஞ்சள், பருத்திக்கு பயிர்க் கடன்களை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
 தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் வியாழக்கிழமை ஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டடத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் (சிப்காட்) பஷீர் தலைமையில் நடைபெற்றது.
 இதில், மாவட்டத்தில் தற்போது பயிரிட்டுள்ள மஞ்சள், பருத்தி மற்றும் சாமந்திக்கு கூட்டுறவு வங்கிகளில் பயிர்க் கடன் வழங்கப்படவில்லை. ஓரிரு மாதங்களில் அறுவடை தொடங்க உள்ள நிலையில், கடன் வழங்காமல் காலம் தாழ்த்தப்படுகிறது. எனவே, அறுவடைக்கு முன்னரே, விரைந்து கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வறட்சியால் கருகிப் போன சிறுதானியம் உள்ளிட்ட பயிர்களைக் கணக்கெடுத்து, அவற்றுக்கான இழப்பீட்டுத் தொகையை நிகழாண்டிலேயே விவசாயிகளிடம் நேரிடையாக வழங்க வேண்டும்.
 கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் விரைவில் கரும்பு அரைவை தொடங்க உள்ள நிலையில், இதுவரை கரும்புக்கான விலை பரிந்துரைக்கவில்லை. இதனால், என்ன விலை கிடைக்கும் என்று தெரியாமல் கரும்பு வெட்டும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, கரும்புக்கான விலையை உடனடியாக அறிவிக்க வேண்டும்.
ஈச்சம்பாடி அணையில் வலது, இடதுபுறக் கால்வாய்களை முறையாக தூர்வாரி கடைமடை பகுதி வரை தண்ணீர் வர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேய்ச்சல் நிலம் அண்மைக்காலமாக அரசு பயன்பாடு மற்றும் தனி நபர் ஆக்கிரமிப்புப் பிடியில் சிக்கியுள்ளது. எனவே, ஆக்கிரமிப்பை அப்புறப்படுத்த வேண்டும்.
 தருமபுரி-அரூர் சாலையில் விரிவாக்கப் பணிகளுக்காக ஏராளமான மரங்கள் வெட்டப்பட்டன. சுற்றுச்சூழலை காக்க இனி வருங்காலங்களில் மரத்தை வேருடன் எடுத்து மாற்று இடத்தில் நடும் தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
 இதைத் தொடர்ந்து, விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏற்கெனவே அளித்த மனுக்களுக்கு துறைவாரியாக பதில் அளிக்கப்பட்டன.
 கூட்டத்தில், சர்க்கரை ஆலை தனி அலுவலர் துர்கா மூர்த்தி (பாலக்கோடு), கோட்டாட்சியர்கள் ராமமூர்த்தி (தருமபுரி), கவிதா (அரூர்), இணை இயக்குநர் (வேளாண்) ராஜேந்திரன், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com