பாலம் அமைத்தும் பயனில்லை: பச்சையம்மன் கோயில் முன் சாலையில் தேங்கும் மழை நீர்

தருமபுரி பச்சையம்மன் கோயில் முன்,  பல லட்சம் மதிப்பில் பாலம் அமைக்கப்பட்டும் பயனின்றி,  சாலையில் குளம் போல மழைநீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள்  அவதிக்குள்ளாகியுள்ளனர்.

தருமபுரி பச்சையம்மன் கோயில் முன்,  பல லட்சம் மதிப்பில் பாலம் அமைக்கப்பட்டும் பயனின்றி,  சாலையில் குளம் போல மழைநீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள்  அவதிக்குள்ளாகியுள்ளனர்.
தருமபுரி நகரிலிருந்து செல்லும் நெடுஞ்சாலை சுமார் 15 கி.மீ தொலைவில்  நல்லம்பள்ளியை அடுத்த சேஷம்பட்டி புறவழிச்சாலையில் இணைகிறது.  ஏற்கெனவே,  இரு வழிச்சாலையாக மாற்றப்பட்டு, தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்,  விரிவுபடுத்தப்பட்ட  இச்சாலையில் நெசவாளர் காலனி,  ராமாக்காள் ஏரி,  பச்சையம்மன் கோயில் உள்ளிட்ட சில இடங்களில் மழைக்காலங்களில் தண்ணீர் வெளியேற வழியின்றி குளம் போல தேங்கி நிற்கும். இதனால், வாகன ஓட்டிகள்  அவதிக்குள்ளாகி வந்தனர்.  குறிப்பாக பச்சையம்மன் கோயில் எதிரே,  சாலையின் இருபுறங்களிலும் நீர் வெளியேற வழி இன்றி  இரு சக்கர வாகனங்கள் மூழ்கும் அளவுக்கு குட்டைப் போல மழை நீர் தேங்கி நிற்கும். இதனால், மழைக்காலங்களில் இச்சாலையில் செல்லும் இருசக்கர வானங்கள் பழுது ஏற்படுவதும், வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாவது  போன்ற நிகழ்வுகள் ஏற்பட்டன.
இதனைத் தொடர்ந்து, இச்சாலையில் இரு புறத்திலும் தண்ணீர் தேங்கி நிற்காதவாறு, பச்சையம்மன் கோயில் எதிரே உள்ள நெடுஞ்சாலையில் சாலையைத் தோண்டி, பல லட்சம் மதிப்பில்  பாலம் அமைக்கப்பட்டு, கடந்த சில நாள்களுக்கு முன் பயன்பாட்டுக்கு வந்தது. இதனால், இனி, இந்தச் சாலையில் தேங்கும் மழை நீரில் ஊர்ந்து சென்று அவதிக்குள்ளாகும் நிலை ஏற்படாது என பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஆனால்,  திங்கள்கிழமை மாலை பெய்த சிறு மழைக்கே,  மீண்டும் அதே இடத்தில் மழைநீர் தேங்கி நின்றது. இதனால், அச்சாலையில் சென்ற வாகனங்கள் மழைநீரில் மூழ்கியவாறு பயணித்தன.
இச் சாலையின் இருபுறங்களிலும் தண்ணீர் செல்ல வழியின்றி, மீண்டும் சாலையிலேயே  மழைநீர் தேங்கி நிற்பதால் பாலம் அமைத்தும் பயனின்றி மீண்டும் பழைய நிலையே  தொடர்கிறது.
எனவே, வாகன ஓட்டிகள் பொதுமக்கள் நலன் கருதி, பச்சையம்மன் கோயில் எதிரே சாலையில் மழைநீர், தேங்கி நிற்காமல், பாலம் வழியாக வெளியேறும் வகையில் சாலையோரத்தில் கால்வாய் அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்கள் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com