தொடரும் உயிரிழப்புகள்: காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படுமா?

தருமபுரி மாவட்டத்தில், காய்ச்சல் பாதிப்பில் உயிரிழப்புகள் தொடர்கிறது. இதைத் தடுக்க நடவடிக்கைகள் தீவிரப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
தொடரும் உயிரிழப்புகள்: காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படுமா?

தருமபுரி மாவட்டத்தில், காய்ச்சல் பாதிப்பில் உயிரிழப்புகள் தொடர்கிறது. இதைத் தடுக்க நடவடிக்கைகள் தீவிரப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

தருமபுரி மாவட்டத்தில், கடந்த சில நாள்களாக ஏராளமானோருக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. மேலும், டெங்கு உள்ளிட்ட பாதிப்புகள் இருப்பதாகவும் அதனால் உயிரிழப்பு ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக, அண்மையில் மாரண்டஹள்ளி பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதேபோல, கடந்த சனிக்கிழமை (ஆக.12) பாலக்கோடு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரும், புதன்கிழமை (ஆக.16) நல்லம்பள்ளி பகுதியில் ஒரு இளைஞரும் காய்ச்சலால் உயிரிழந்தனர்.

இது தவிர, மாவட்டத்தில் உள்ள அரூர், பாலக்கோடு, பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டியில் உள்ள மருத்துவமனைகளிலும், தனியார் மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ஏராளமானோர் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், சேலம்,பெங்களூரு தனியார் மருத்துவமனைகளுக்கும் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில், பென்னாகரம் மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனை, பாலக்கோடு, அரூர் உள்ளிட்ட நான்கு அரசு மருத்துவமனைகளில் சுமார் 50-க்கும் மேற்பட்டோரும், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுமார் 200-க்கும் அதிகமானோரும் காய்ச்சல் காரணமாக உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நாளுக்கு நாள் காய்ச்சல் பாதிப்பு அதிகளவில் ஏற்படுவதால், மாவட்ட மக்கள் ஒரு வித அச்ச உணர்வோடு இருக்கின்றனர். தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு அண்மையில் மாநில சுகாதாரச் செயலர் ராதாகிருஷ்ணன் நேரில் வந்து நோயாளிகளை பார்வையிட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், மாவட்டத்தில், பல்வேறு பள்ளிகளுக்குச் சென்று, சுகாதாரத் துறை, சித்தா மருத்துவப் பிரிவு சார்பில், டெங்கு காய்ச்சல் தொடர்பாக விழிப்புணர்வுக் கூட்டம், பேரணி நடத்தப்படுகிறது. இதில், மாணவ, மாணவியருக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

இருப்பினும், பொதுவாக பள்ளிகளைத் தவிர, நகராட்சி மற்றும் கிராம ஊராட்சிகளில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படவில்லை என பல்வேறு அரசியல் கட்சிகள் புகார் தெரிவித்து வருகின்றன. எனவே, மாவட்டத்தில், காய்ச்சல் காரணமாக நிகழும் உயிரிழப்புகளைத் தடுக்க, அனைத்து கிராமங்கள் மற்றும் நகராட்சிப் பகுதிகளில் காய்ச்சல் தடுப்பு முகாம்களை விரைந்து நடத்தி, தண்ணீர் தேங்கி நிற்கும் பொருள்களை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள விரைந்து குழுக்களை அமைத்து கண்காணிக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் மற்றும் மாவட்ட மக்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.

இதுகுறித்து, இணை இயக்குநர் (நலப் பணிகள்) எம்.கே. பொன்னுராஜ் கூறியது : தருமபுரி மாவட்டத்தில், சுகாதாரத் துறை, சித்த மருத்துவப் பிரிவுடன் இணைந்து பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த முகாம்களில், நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

போர்க்கால அடிப்படையில் முகாம்கள் நடத்தி வருவதால் தற்போது, காய்ச்சல் பாதிப்பு 50 சதம் குறைந்துள்ளது. இந்த நடவடிக்கைகள் காரணமாக, வட்டாரத் தலைமை மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக உள்நோயாளிகளாக வருவோரின் எண்ணிக்கையும் தற்போது வெகுவாகக் குறைந்துள்ளது என்றார்.

தருமபுரி மருத்துவக் கல்லூரி முதல்வர் சீனிவாசராஜூ கூறியது: தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி தற்போது 200 பேர் காய்ச்சல் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், 4 பேருக்கு மட்டும் பாதிப்பு அதிகமாக உள்ளது. அவர்களுடைய ரத்த மாதிரி பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. சிகிச்சை பெறுபவர்களில் டெங்கு பாதிப்பு யாருக்கும் இல்லை என்றார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com