தருமபுரி ரயில் நிலையத்தில் பயன்படுத்தப்படாத முதலாவது நடைமேடை! அவதிக்குள்ளாகும் மாற்றுத் திறனாளிகள், வயதான பயணிகள்

தருமபுரி ரயில் நிலையத்தில் உள்ள முதலாவது நடைமேடையில் ரயில்கள் நிறுத்தப்படுவதில்லை. இதனால்,  இரண்டாவது மற்றும் மூன்றாவது

தருமபுரி ரயில் நிலையத்தில் உள்ள முதலாவது நடைமேடையில் ரயில்கள் நிறுத்தப்படுவதில்லை. இதனால்,  இரண்டாவது மற்றும் மூன்றாவது நடைமேடைகளுக்குச் செல்ல மாற்றுத் திறனாளிகள் மற்றும் வயதான பயணிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர்.
தருமபுரி ரயில் நிலையத்தில் தினமும் 13 ரயில்கள் நின்று செல்கின்றன.  பெங்களூரு,  மைசூரு,  சேலம்,   நாகர்கோவில்,  மயிலாடுதுறை,  திருச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கான ரயில்கள் இவ் வழியாகச் செல்கின்றன.  நாள்தோறும் சராசரியாக 3 ஆயிரம் பயணிகள் இறங்கி,  ஏறிச் செல்வதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. 
ஆனால்,   ரயில் நிலையத்தின் முதலாவது நடைமேடை நீண்ட காலமாகவே பயன்பாட்டில் இல்லை.  வழக்கமாகவே இரண்டாவது நடை மேடையில்தான் ரயில்கள் நின்று செல்கின்றன.
இரவு நேரத்தில் இரு ரயில்கள் ஒரே நேரத்தில் வரும்போதிலும்கூட (கிராஸிங்)  இரண்டாவது மற்றும் மூன்றாவது நடைமேடைகளே பயன்படுத்தப்படுகின்றன.  அப்போதும் கூட முதலாவது நடைமேடை ஓய்வில்தான் இருக்கிறது.
ஆனால்,  பெங்களூரில் இருந்து தருமபுரி வரை இயக்கப்படும் டெமோ ரயில் மட்டும் சனிக்கிழமை இரவு நிறுத்தப்பட்டு,  திங்கள்கிழமை காலை வரை முதலாவது நடைமேடையில் ஓய்வெடுக்கிறது!
ரயில் நிலையம் அமைக்கப்படும்போதே சிறு தவறு நேர்ந்துவிட்டதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  அதாவது, ரயில் நிலையத்துக்குள் உள்ளே வந்து செல்லும் பகுதிகளின் பிரதான தண்டவாளம் இரண்டாவது நடைமேடையாகி விட்டது.  முதலாவது நடைமேடை,  பிரிந்து வரும் தண்டவாளமாக  (லூப் லைன்) அமைக்கப்பட்டு விட்டது.
முதலாவது நடைமேடையில் நிறுத்த வேண்டுமானால்,  ரயில்கள் வளைந்து வருவதற்காக சிறிது தொலைவிலேயே வேகத்தைக் குறைக்க வேண்டும்,  இதனால் சுமார் 8 நிமிஷங்கள் வரை தாமதம் ஏற்படுவதால்,  தலைமையிடத்தில் இருந்தே முதல் நடைமேடையில் ரயில்களை நிறுத்தக் கூடாது என அரசாணையே வெளியிட்டுவிட்டதாக ரயில் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். 
ஆனால்,  இதனை ரயில் பயணிகள் கடுமையாக விமர்சனம் செய்கின்றனர்.  முதலாவது,  தாமதத்தை ஒரு காரணமாகக் கூறும் ரயில்வே துறை,  இவ் வழியாக எந்தவொரு ரயிலையும் குறிப்பிட்ட நேரத்தில் இயக்குவதே கிடையாது என குற்றம்சாட்டுகின்றனர்.  இரண்டாவது,  முதலாவது நடைமேடையை பிரதான தண்டவாளமாக மாற்றுவதில் பெரும் தொகை செலவாகிவிடாது என்கிறார்கள்.
இவற்றுக்கான காரணங்கள் மிக முக்கியமானவை.  ரயில்வே துறையில் மாற்றுத் திறனாளிகளுக்கும் வயது முதிர்ந்த பயணிகளுக்கும் கட்டணச் சலுகை மற்றும் முன்பதிவில் சலுகை போன்றவை வழங்கப்படுகின்றன.
ஆனால்,  தருமபுரி ரயில் நிலையத்தில் தற்போதுள்ள இந்த நடைமேடைச் சிக்கலால் இவர்கள் இரண்டாவது நடைமேடைக்கும், மூன்றாவது நடைமேடைக்கும் செல்வது சிரமமாகி வருகிறது.
மேலும்,  முதலாவது நடைமேடையில் மட்டுமே கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன.  இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு ரயில்வே நிர்வாகம் முதலாவது நடைமேடையை இயக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ரயில் பயணிகள் கோருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com