ஜப்தி உத்தரவு: போக்குவரத்துக் கழக அலுவலகத்திற்குள் செல்ல நீதிமன்ற ஊழியர்களுக்கு அனுமதி மறுப்பு

விபத்து வழக்கில் அரசுப் போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகத்தை ஜப்தி செய்ய வந்த நீதிமன்ற ஊழியர்கள், வழக்குரைஞருக்கு அலுவலகம் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

விபத்து வழக்கில் அரசுப் போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகத்தை ஜப்தி செய்ய வந்த நீதிமன்ற ஊழியர்கள், வழக்குரைஞருக்கு அலுவலகம் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே கூன்மாரிக்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி கணேசன் (37). இவர், கடந்த 2011 மே மாதம் 14-ஆம் தேதி  தருமபுரி செல்லும் சாலையில் ஓரமாக நின்றுக்கொண்டிருந்தபோது இவர் மீது, சேலத்திலிருந்து தருமபுரி நோக்கி வந்த அரசுப் பேருந்து மோதியது. இதில், பலத்த காயமடைந்த கணேசன் தருமபுரி அரசு மருத்துவமனையில் 2011 மே 20-ஆம் தேதி உயிரிழந்தார்.
இதையடுத்து இழப்பீடு கோரி உயிரிழந்த கணேசனின் மனைவி மணி தருமபுரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த 2012 செப்டம்பர் 27-ஆம் தேதி மனுதாரருக்கு ரூ. 6 லட்சத்து 24 ஆயிரம் வட்டியுடன் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.
இதில், அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் மூன்று தவணைகளாக குறிப்பிட்டத் தொகை செலுத்தப்பட்டது. இருப்பினும், இவ்வழக்கில் ரூ. ஒரு லட்சத்து 80 ஆயிரம் செலுத்தாமல் நிலுவையில் இருந்து வந்தது.
இதைத் தொடர்ந்து, மனுதாரர் தரப்பில், மீண்டும் அதே நீதிமன்றத்தில், நிறைவேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இம் மனு மீது கடந்த நவம்பர் 22-ஆம் தேதி, விசாரணை நடத்திய நீதிமன்றம் நிலுவைத் தொகை செலுத்தத் தவறினால், போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகத்தில் உள்ள கணினி, ஜெனரேட்டர், மேஜை, நாற்காலிகள், மின் விசிறி உள்ளிட்ட தளவாட பொருள்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டது.
ஜப்தி உத்தரவுடன், போக்குவரத்துக் கழக அலுவலகத்துக்கு நீதிமன்ற ஊழியர்கள், மனுதாரர் மற்றும் அவரது வழக்குரைஞர் உள்ளிட்டோர் புதன்கிழமை சென்றனர். தகவல் அறிந்த, போக்குவரத்துக் கழக அலுவலக நிர்வாகிகள், அவர்களை உள்ளே செல்லவிட மறுத்து, நுழைவு வாயிலைப் பூட்டினர். 
இதைத் தொடர்ந்து, அவர்கள் காவல்துறையிடம் முறையிட்டு அனுமதியுடன் ஜப்தி செய்ய வருவதாகக் கூறி திரும்பிச் சென்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com