பாப்பாரப்பட்டி பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வருமா?

பாப்பாரப்பட்டியில் புதிதாக கட்டப்பட்ட பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு எப்போது வரும் என அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

பாப்பாரப்பட்டியில் புதிதாக கட்டப்பட்ட பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு எப்போது வரும் என அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
 தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டத்துக்குள்பட்டது பாப்பாரப்பட்டி. பேரூராட்சியாக உள்ள பாப்பாரப்பட்டி வழியாக பென்னாகரம், பாலக்கோடு, மாரண்டஹள்ளி, ஒசூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் செல்கின்றன. மேலும், பாலக்கோடு வழியாக ஒசூர்-ஒகேனக்கல் செல்லும் பிரதான சாலை இந்த ஊரின் வழியே செல்கின்றன.
 இவை தவிர, இண்டூர், பென்னாகரம், பாலக்கோடு, தருமபுரி, பிக்கிலி, மருக்காரம்பட்டி, வட்டுவனஅள்ளி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு என சுமார் 50-க்கும் மேற்பட்ட நகரம் மற்றும் புறநகரப் பேருந்துகள் பாப்பாரப்பட்டி வந்து செல்கின்றன.
 இப்பேருந்துகள் மூலம் விவசாயிகள், தொழிலாளர்கள், பள்ளி மாணவ, மாணவியர் என பல்வேறு தரப்பினர் தங்களது பணிகளுக்காக நாள்தோறும் சென்று வருகின்றனர்.
 இவ்வாறு பயணிகள் பேருந்துக்காக காத்திருக்கவும், செல்லவும் பேருந்து நிலையம் இல்லாததால், சாலையிலேயே நிற்பது வழக்கமாக இருந்தன. இதனால் பேருந்துகளும் சாலையிலேயே பயணிகளை ஏற்றியும், இறக்கியும் வந்தன.
 இதன் காரணமாக, பாப்பாரப்பட்டி சாலை எப்போதும் நெரிசல் மிகுந்து காணப்பட்டது. மேலும், மழை மற்றும் வெயில் காலங்களில் பயணிகள் நிற்க இடமின்றி அவதிக்குள்ளாகி வந்தனர். இதனால், இங்கு பேருந்து நிலையம் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
 இதனை பரிசீலித்த தமிழக அரசு, பாப்பாரப்பட்டியில் பேருந்து நிலையம் கட்டப்படும் என அறிவித்து, அடிப்படைக் கட்டமைப்பு மற்றும் இடைவெளி நிரப்பும் திட்டம் (2015-16) மூலம் ரூ.1.70 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்தது. மேலும், ஒப்பந்தம் விடப்பட்டு ஓராண்டுக்கு மேலாக நடைபெற்று வந்த பணிகள், கடந்த சில மாதங்களுக்கு முன் நிறைவடைந்தன.
 இப் பேருந்து நிலையத்தில் 24 கடைகள், ஒரு உணவகம், குழந்தைகளுக்கு பாலூட்டும் அறை, புறகாவல் நிலையத்துக்கான அறை, மூன்று பயணிகள் காத்திருப்புக் கூடம் மற்றும் கழிப்பறை ஆகியவை கட்டப்பட்டுள்ளன.
 இந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் தருமபுரியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில், பங்கேற்ற முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, பாப்பாரப்பட்டி பேருந்து நிலையத்துக்கு எம்.ஜி.ஆரின் பெயர் சூட்டி, திறந்து வைப்பதாக அறிவித்தார்.
 இதைத் தொடர்ந்து, பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த டிச.5-ஆம் தேதி எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம் என்ற பெயர் பலகையும் வைக்கப்பட்டது.
 இருப்பினும், திறப்பு விழா முடிந்து சுமார் இரண்டு மாதங்களுக்கு மேலாகியும், அரசு உத்தரவிட்டும், இதுநாள் வரை பாப்பாரப்பட்டி பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வரவில்லை.
 இதனால், பேருந்து நிலையம் திறந்த பிறகும், சாலையிலேயே பயணிகள் நிற்கும் அவலநிலை தொடர்கிறது. மேலும், காலியாக உள்ள பேருந்து நிலையத்தை வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் சந்தையாக பயன்படுத்தப்படுகிறது.
 எனவே, இப்பேருந்து நிலையத்தை விரைந்து பயன்பாட்டுக்கு கொண்டுவர பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com