அடர்வனத்துக்குள் வாழும் "அலக்கட்டு' மக்கள்!

தருமபுரி மாவட்டத்தில் யானைகள், காட்டெருமைகள் உலவும் அடர்வனத்துக்குள் பல தலைமுறைகளாக அலக்கட்டு மலைக் கிராம மக்கள் வசித்து வருகின்றனர்.
அடர்வனத்துக்குள் வாழும் "அலக்கட்டு' மக்கள்!

தருமபுரி மாவட்டத்தில் யானைகள், காட்டெருமைகள் உலவும் அடர்வனத்துக்குள் பல தலைமுறைகளாக அலக்கட்டு மலைக் கிராம மக்கள் வசித்து வருகின்றனர்.
 தருமபுரி மாவட்ட மலைப்பகுதிகளின் மக்கள் வாழும் இடங்களில், ஏரிமலை, கோட்டூர் மலைகளின் தொகுப்பில் உள்ளது அலக்கட்டு. மாவட்டத்தின் பெரிய வனமான மொரப்பூர் 'பீட்'டுக்குள் அடங்கியது அலக்கட்டு.
 பாலக்கோட்டில் இருந்து 7 கிமீ தொலைவிலுள்ள சீங்காட்டில் இருந்து தரைப்பகுதி மற்றும் மலைப்பகுதி கலந்த 8 கிமீ தொலைவு நடந்தால் அலக்கட்டை அடையலாம்.
 மற்ற மலைப் பகுதிகளைக் காட்டிலும் சவால் மிகுந்த பாதை. சில இடங்களில் செங்குத்தாகவும், பல இடங்களில் ஒற்றையடிப் பாதையாகவும் காணப்படுகிறது.
 இங்கு பல தலைமுறைகளைக் கடந்து லிங்காயத்து சமூக மக்கள் வசிக்கிறார்கள். பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடகப் பகுதியிலிருந்து வந்த சிக்காரி பசுவப்பா என்பவரின் இரு மகன்களில் ஒருவரான குர்ஷிதப்பா என்பவர், தற்போது கேசர்குலிஹல்லா அணையுள்ள பகுதியில் குடியேறியிருக்கிறார்.
 அவருக்கு காடுஆள்தாப்பா, பூஜாரியப்பா, மர்சிதப்பா ஆகிய மூன்று மகன்கள். இவர்களில் பூஜாரியப்பா தான் அடர்வனக் காட்டுக்குள் அலக்கட்டில் குடியேறியவர். அவரைத் தொடர்ந்து அவரது மகன் குர்சிதப்பா, அவரது மகன் ரேவணப்பா, அவரது மகன் பசப்பா (இப்போது உள்ளார், வயது 80), அவரது மகன் மாதப்பன், அவரது மகன் பசுவராஜ் (25) வரை அலக்கட்டுவாசிகள்.
 பசுவராஜ்தான் முதல் பட்டதாரி. பிஏ, பிஎட். இவருக்குப் பிறகு 8ஆம் வகுப்பை முடித்தவர்கள் 2 பேர், 5ஆம் வகுப்பு முடித்தவர்கள் 4 பேர் உள்ளனர், அவ்வளவே. தற்போது இங்குள்ள நடுநிலைப் பள்ளியில் ("ஃ"பைபர் கட்டடம்!) 5 பேர் 8ஆம் வகுப்பு படிக்கின்றனர்.
 20 வீடுகளில் 38 குடும்பங்கள் உள்ளன. மொத்த மக்கள் தொகை 151. வாக்காளர் எண்ணிக்கை 90. 4 கிமீ தொலைவிலுள்ள ஏரிமலையில்தான் நியாய விலைக் கடை, வாக்குச்சாவடி!
 கேழ்வரகு, அவரை, கடுகு இவர்களது சாகுபடி. பெரும்பாலும் வீட்டுத் தேவைக்குத்தான். ஆடு, மாடு வளர்ப்புதான் வருவாய். வியாபாரிகள் அவ்வப்போது மேலே வந்து வாங்கிச் செல்கிறார்கள். வாரம் ஒரு முறை கீழே இறங்கி வந்து (8 கிமீ வனப் பயணம்) வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி வைத்துக் கொள்கின்றனர்.
 அடர்வனம் என்றாலும், வறட்சி இவர்களையும் தாக்கியுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வறட்சியின் காரணமாக ஊரே கூடிப் பேசி அலக்கட்டை காலி செய்யவும் யோசித்திருக்கிறார்கள். ஓரிரு குடும்பங்கள் மட்டும் கிளம்பியுள்ளன.
 சாலை தேவை!
 பள்ளிக் கல்வியைத் தொடரவும், விளை பொருட்களை விற்பனை செய்யவும் பாலக்கோட்டுக்கு வர சாலை வசதி மிகவும் அவசியம் என்கிறார் பசுவராஜ். சாலை கிடைத்தால், ஒரு காலத்தில் இங்கு விளைந்த பனி வரகு, தினை போன்றவற்றை மீண்டும் விளைவித்து வந்து விற்பனை செய்வோம் என்கிறார்.
 "மாரண்டஅள்ளி சந்தைக்கு வந்து பொருட்களை வாங்கிக் கொண்டு, இருட்டி விட்டால் வழியில் ஏதாவதொரு ஊரில் தங்கி மறுநாள் மலை ஏறுவோம்' என சில பத்தாண்டுகளுக்கு முந்தைய வாழ்க்கையை நினைவு கூருகிறார் பசப்பா (80).
 6 ஆண்டுகளுக்கு முன்பு குழந்தை பெற்றெடுத்த எனது மருமகளுக்கு திடீரென உடல்நலன் குன்றியபோது, தூளி கட்டி கீழே கொண்டு சென்றோம். வழியிலேயே இறந்துவிட்டார். அப்போது எங்கள் கிராமத்துக்கு வந்த வெளிநாட்டுக்காரர்களிடம் குழந்தையைக் கொடுத்துவிட்டோம்' என்கிறார் பாண்டியம்மாள்.
 குடிநீர்த் தேவை!
 அலக்கட்டில் ஊராட்சி சார்பில் 10 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட கிணற்றைத் தூர் எடுத்து, அண்மையில் கட்டப்பட்ட மேல்நிலைத் தொட்டிக்கு இணைப்பு கொடுக்க வேண்டும் என்கிறார் பசுவராஜ். தூர் எடுக்க நிதி ஒதுக்கப்பட்டதாகக் கூறி பல மாதங்களாகியும் பணிகள் எதுவும் தொடங்கவில்லை என்கிறார் அவர்.
 மற்றபடி, பூமரத்துச் சுனையிலிருந்தும், அத்திமரத்துக்குட்டையிலிருந்தும் இவர்கள் தங்களது தண்ணீர்த் தேவையைப் பூர்த்தி செய்கிறார்கள்.
 உள்ளாட்சி தான் வழி!
 "அலக்கட்டுக்குச் செல்லும் பாதை, ஏரிமலைக்குச் செல்லும் பாதை உரிமைகள் இவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது என்பதால், வனத் துறையில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை. ஆனால், சாலை அமைக்கும் அளவுக்கு வனத்துறையில் போதிய நிதியில்லை. உள்ளாட்சி அமைப்புகள்தான் சாலை அமைக்க வேண்டும்' என்கிறார் மாவட்ட வன அலுவலர் க. திருமால்.
 இவர்களின் குறைகளைத் தீர்க்க வருவாய்த் துறைதான் மற்ற துறைகளை ஒருங்கிணைக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் கருணை வைக்குமா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com