கொக்கராப்பட்டி புதன்சந்தை வளாகம் மேம்படுத்தப்படுமா?

கொக்கராப்பட்டி புதன் சந்தை வளாகத்தை மேம்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கொக்கராப்பட்டி புதன் சந்தை வளாகத்தை மேம்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், அரூர்-சேலம் நெடுஞ்சாலையில், கோபிநாதம்பட்டி கூட்டுச் சாலையில் அமைந்துள்ளது கொக்கராப்பட்டி புதன் சந்தை. தருமபுரி மாவட்டத்தில் கால்நடைகள் அதிகளவில் விற்பனை செய்யும் முக்கிய வாரச் சந்தையாக இந்த புதன் சந்தை விளங்குகிறது.
இந்த சந்தைக்கு வாரந்தோறும் சுமார் 200 மாடுகளும், சுமார் 1,500 ஆடுகளும் விற்பனைக்கு வருகின்றன. கோடிக் கணக்கான மதிப்பிலான கால்நடைகள் விற்பனையாகும் இந்த சந்தைக்கு, வாரந்தோறும் ஆயிரக்கணக்கான வியாபாரிகள், பொதுமக்கள் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து வருகை தருகின்றனர்.
இந்த சந்தை விடியற்காலை 4 மணியளவில் கூடுவதால், வெளியூர் வியாபாரிகள் ஒரு நாள் முன்னதாக வந்துவிடுகின்றனர். அதேபோல், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தக்காளி, கத்தரிக்காய் உள்ளிட்ட காய்கறிகளை விற்பனை செய்வதற்காகவும் வருகின்றனர்.
இந்த வாரச்சந்தையால், ஆண்டுதோறும் அரூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு லட்சக்கணக்கில் நுழைவு கட்டண வரி வசூல் கிடைக்கிறது.
போதிய வருவாய் இருந்தும் ,காய்கறிகள், தானியங்கள், கயிறு விற்பனை, பழ வகைகள் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருள்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் அமர்வதற்கான சிமெண்ட் மேடை வசதிகள், நிழல் வசதிகள் இங்கு இல்லை. இதனால், மழை மற்றும் கோடை காலங்களில் பல்வேறு துன்பங்களை அடைவதாக வாரந்தோறும் சந்தைக்கு வருகை தரும் சிறு வியாபாரிகள் புகார் கூறுகின்றனர்.
பாதுகாக்கப்பட்ட குடிநீர் தேவை: புதன்சந்தைக்கு வரும் வியாபாரிகள், பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதியில்லை. மிகவும் பழமையான தண்ணீர்த் தொட்டியில் இருந்து வழங்கப்படும் குடிநீர் தொட்டி முறையாக தூய்மை செய்வதில்லை. எனவே, பாதுகாக்கப்பட்ட குடிநீரை வழங்க கொக்கராப்பட்டி ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார் ஆட்டு வியாபாரி அண்ணாமலை (52).
நவீன கழிப்பிடக் கட்டடம் அவசியம்: அதேபோல், வாரச்சந்தைக்கு வரும் வியாபாரிகள், பொதுமக்கள் கழிப்பிட வசதியில்லாமல் சிரமமடைகின்றனர். அதனால், சந்தை வளாகத்தில் உள்ள சுடுகாடு, சந்தை வளாகம் அருகேயுள்ள பெருமாள் கோயில் பகுதியில் சிறுநீர் கழித்து அசுத்தம் செய்கின்றனர்.
மேலும், சந்தை வளாகம் முள்புதர்கள் அடைந்தும், இறைச்சிக் கழிவுகளால் துர்நாற்றமும் வீசுகிறது.
எனவே, மாவட்ட நிர்வாகம் சந்தை வளாகத்தை தூய்மை செய்து, பொதுமக்களுக்கு தேவையான கழிப்பிடம் மற்றும் பாதுகாக்கப்பட்ட குடிநீர், வெளியூர் வியாபாரிகள் தங்குவதற்கான விடுதி வசதிகள், வியாபாரிகள்அமர்ந்து வியாபாரம்செய்ய மேடை வசதிகள், சந்தை வளாகத்தில் உயர்கோபுர மின் விளக்கு வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அரூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) பெ.கிருஷ்ணன் கூறுகையில், நிகழாண்டில் புதன்சந்தையின் நுழைவுக் கட்டணத்தில் கிடைக்கும் வருவாய் வாயிலாக, சந்தைக்கு வரும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான பாதுகாக்கப்பட்ட குடிநீர், நவீன கழிப்பிடம், வியாபாரம் செய்வதற்கான நிழல் கூரைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com