1,000 மரக்கன்றுகளைக் காப்பாற்ற கூடுதல் வசதி செய்யப்படுமா?

மாபெரும் மரம் நடும் திட்டத்தில் தருமபுரி மாவட்டம், கெரகோடஅள்ளி அருகே நடவு செய்யப்பட்டுள்ள 1,000 மரக்கன்றுகளைக் காப்பாற்ற வட்டார வளர்ச்சி அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்த
1,000 மரக்கன்றுகளைக் காப்பாற்ற கூடுதல் வசதி செய்யப்படுமா?

மாபெரும் மரம் நடும் திட்டத்தில் தருமபுரி மாவட்டம், கெரகோடஅள்ளி அருகே நடவு செய்யப்பட்டுள்ள 1,000 மரக்கன்றுகளைக் காப்பாற்ற வட்டார வளர்ச்சி அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.
 மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி ஒவ்வோர் ஆண்டும் அவரது வயதுக்கேற்ப லட்சக்கணக்கான மரக்கன்றுகள் கடந்த 5 ஆண்டுகளில் மாநிலம் முழுவதும் நடவு செய்யப்பட்டுள்ளன.
 அதில் கடந்த நிதியாண்டில் தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டத்தில், கெரகோடஅள்ளி அருகே பொன்னேரி பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள மாதிரிப் பள்ளிக்குப் பின்புறம் பழந்தோட்டம் என்ற இடத்தில் சுமார் 1,200 மரக்கன்றுகள் நடவு செய்யத் திட்டமிடப்பட்டது.
 சுமார் 2 ஹெக்டேர் நிலப்பரப்பில் சுமார் 1,000 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. கால்நடைகளின் தொந்தரவைக் கட்டுப்படுத்த சுற்றிலும் கம்பிவேலியும் அமைக்கப்பட்டுள்ளது.
 புங்கன், புளி மற்றும் மந்தாரை வகை மரக்கன்றுகள் இங்கு நடப்பட்டுள்ளன. இந்தக் கன்றுகளுக்குத் தண்ணீர் விடுவதற்காக கடந்த டிசம்பர் 16-ஆம் தேதி முதல் 45 நாள்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 20 பெண்களுக்குப் பணி வழங்கப்பட்டுள்ளது.
 மரங்கள் நடவு செய்யப்பட்டுள்ள இடத்துக்கு அருகே தனியார் ஆழ்துளைக் கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து காலை, மாலை இரு வேளைகளும் பெண்கள் தண்ணீர் ஊற்றுகின்றனர்.
 ஆனால், வேலை உறுதித் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட தொகை தீர்ந்தால், தண்ணீர் ஊற்றும் பணி நின்றுவிடும். மழை பொய்த்துப் போயுள்ள நிலையில், மாவட்டத்தின் பெரும்பகுதி வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதால் அத்தனை மரக்கன்றுகளும் பிழைத்துக் கொள்ளும் என்று நம்புவதற்கில்லை.
 அதேநேரத்தில், மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ள நிலத்திலேயே பழங்கால கிணறு ஒன்று கைக்கெட்டிய ஆழத்திலேயே தண்ணீருடன் இருப்பது இந்தக் கன்றுகளுக்கு கிடைத்த அரிய வாய்ப்பு.
 பக்கத்திலேயே மோட்டார் வைக்கப்பட்ட அறை ஒன்றும் இருக்கிறது. பள்ளிக்கூடம் கட்டும்போது இந்த மோட்டார் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. கட்டுமானப் பணிகள் முடிவடைந்த பிறகு, மோட்டார் பயன்பாட்டிலிருந்து மின் கட்டணம் அதிகம் வந்ததாகச் சொல்லி பயன்பாடு நிறுத்தப்பட்டுள்ளது.
 காரிமங்கலம் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் இந்த இடத்தை நேரில் பார்வையிட்டு, துளிர்த்து வந்திருக்கும் மரக்கன்றுகளைப் பாழாக்கிவிடாமல் பாதுகாத்து வளர்த்திட, இந்தக் கிணற்றில் இருந்து மோட்டார் மூலம் தண்ணீர் இறைத்து கோடைக்காலம் முழுவதும் தண்ணீர் ஊற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். அப்போதுதான் உண்மையான மரம் நடவுத் திட்டம் வெற்றியைத் தரும்.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com