தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் காமராஜர் பிறந்த நாள் விழா

தருமபுரியில் காங்கிரஸ், த.மா.க. சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

தருமபுரியில் காங்கிரஸ், த.மா.க. சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
தருமபுரி பேருந்து நிலையம் அருகேயுள்ள காமராஜர் சிலைக்கு, காங்கிரஸ் மாவட்டத் தலைவர் சிற்றரசு தலைமையில் நகரத் தலைவர் செந்தில்குமார்.
முன்னாள் மாவட்டத் தலைவர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.
இதேபோல, தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜெகதீசன் தலைமையில் மாவட்டப் பொருளாளர் புகழ், இளைஞரணி செயலர் சங்கர் கணேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இலக்கியம்பட்டி
இலக்கியம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு தலைமை ஆசிரியர் மு.பொன்முடி தலைமை வகித்தார். பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் பி.ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மு.ராமசாமி, காமராஜர் உருவப்படத்தை திறந்துவைத்து பேசினார்.
முன்னதாக, கல்வி வளர்ச்சி நாள் விழாவையொட்டி இலக்கிய மன்றத் தொடக்க விழா மற்றும் குறள் நெறி பேரவை சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றன.
இதையொட்டி, பள்ளி அளவிலான அறிவியல் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. விழாவில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்ட ஒருங்கிணைப்பாளர் யு.எம்.சுப்ரமணியன், பள்ளித் துணை ஆய்வாளர் சீனிவாசன், குறள் நெறிப்பேரவை நிர்வாகிகள் கா.குமரவேல், பே.வெங்கடேசன், மு.அர்த்தநாரி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
புலிகரை:இதேபோல புலிகரை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் தலைமை ஆசிரியை (பொ) ஸ்ரீ மதி, காமராஜர் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். விழாவையொட்டி, பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
பெற்றோர்- ஆசிரியர் கழகத் தலைவர் சி.செந்தில்குமார், நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் கோவிந்தன், ஆசிரியர் ஆரோக்கியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பென்னாகரம் பகுதியில்
பென்னாகரம் அருகே மாங்கரை அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் எம்.சிவலிங்கம் தலைமையிலும், பொ.மல்லாபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் அப்துல் அஜீஸ் தலைமையிலும், குண்டலஅள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் கே.சரவணன் தலைமையிலும் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
பூகானஅள்ளி: பாலக்கோடு ஒன்றியம், பூகானஅள்ளி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற கல்வி வளர்ச்சி நாள் நிகழ்ச்சிக்கு, முன்னாள் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் கோவிந்தசாமி, ஊர் பெரியவர் கந்தவேல், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர் காவிரி, கிராம கல்விக் குழுத் தலைவர் முருகன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
மாணவர்களுக்கு கழுத்துப் பட்டை, இடுப்புப் பட்டை, அடையாள அட்டை ஆகியவற்றை தருமபுரி அய்யனார் இனிப்பகத்தின் உரிமையாளர் பெத்துராஜ் வழங்கினார். நாற்காலிகளை கணேசா ஸ்டோர்ஸ் உரிமையாளர் ராதாகிருஷ்ணன் வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை பள்ளித் தலைமை ஆசிரியர் அசோக்குமார் செய்திருந்தார்.
கடத்தூர்
கடத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கல்வி வளர்ச்சி நாள் விழாவுக்கு பள்ளியின் பொறுப்புத் தலைமை ஆசிரியர் ஆர். மணிமாறன் தலைமை வகித்தார். ஆசிரியர்கள் சக்திவேல், வேலுமணி, தெய்வம், மயில்முருகன், பிரபாகரன், செந்தில்குமார் ஆகியோர் முன்னாள் முதல்வர் கு. காமராசர் குறித்து விளக்கிப் பேசினர்.
முன்னதாக தொழிற்கல்வி ஆசிரியர் எம். தமிழ்ச்செல்வன் வரவேற்றார். முடிவில் ஆங்கில ஆசிரியர் எம். தனபால் நன்றி கூறினார். போட்டிகளில் வென்றோருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
ஊத்தங்கரையில்
காங்கிரஸ் கட்சி சார்பில் ஊத்தங்கரை நான்கு முனை சாலை சந்திப்பில் நடைபெற்ற விழாவில் முன்னாள் பேரூராட்சித் தலைவர் எஸ்.பூபதி தலைமை வகித்து, காமராஜர் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும், ஊத்தங்கரையைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட தமாக நிர்வாகிகள் சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் மாநில தலைவர் திருநாவுக்கரசு, அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் செல்லகுமார் முன்னிலையில் காங்கிரஸில் இணைந்தனர்.
அரசுப் பள்ளிகளில்
ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு தலைமை ஆசிரியர் மாதப்பன் தலைமை வகித்தார்.பெற்றோர்- ஆசிரியர் கழகத் தலைவர்கள் வி.சுவாமிநாதன், எ.தேவராசன்,உதவி தலைமை ஆசிரியர் பற்குணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
காமராஜர் பிறந்த நாள் விழாவையொட்டி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட பேச்சு, கட்டுரைப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
பா. நடுப்பட்டி: பா.நடுப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் காமராஜர் விழா தலைமை ஆசிரியர் சி.குப்புசாமி தலைமையில் நடைபெற்றது. விழாவில் காமராஜர் குறித்து சிறப்பாக பேசிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
நாப்பிராம்பட்டி: நாப்பிரம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், ஊர் பொது மக்கள், பெற்றோர்கள், பி.டி.ஏ. பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
பள்ளி தலைமை ஆசிரியர் சரஸ்வதி கல்வியின் முக்கியத்துவம் குறித்து பேசினார். கலை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
மகனூர்பட்டி: ஊத்தங்கரை ஒன்றியத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் தந்தை இழந்த மற்றும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு காமராஜர் பிறந்த நாளையொட்டி கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு ஆர்எல்ஆர் இன்டேன் காஸ் உரிமையாளர் ஜெ.லதா, 220 மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் தலைமையாசிரியர்கள் மகனூர்பட்டி- எம்.எஸ்.சுப்பிரமணியம், உப்பாரப்பட்டி- ரவி, சின்னகாரப்பட்டு- ஷியமளா, கோவிந்தாபுரம்- (பொறுப்பு) தலைமையாசிரியர் ஸ்டெல்லா மற்றும் ஆசிரியர்கள், ஆசிரியைகள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
ஜோதிநகர்: ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற காமராஜர் பிறந்த நாள் விழாவுக்கு தலைமை ஆசிரியர் செ.இராஜேந்திரன் தலைமை வகித்தார். கட்டுரை, கவிதை, பாடல், பேச்சு, ஓவியம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
மாரம்பட்டி: மாரம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் அமுதசெல்வி தலைமை வகித்தார். பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
ஊத்தங்கரை நடுநிலைப் பள்ளி: ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு தலைமை ஆசிரியர் இர.தாசூன் தலைமை வகித்தார். விழாவில் ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கணேசன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கினார்.பெற்றோர்- ஆசிரியர் கழகத் தலைவர் பன்னீர்செல்வம் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.
போச்சம்பள்ளி
எம்.ஜி.எம். பள்ளி: போச்சம்பள்ளி எம்.ஜி.எம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா சனிக்கிழமை கொண்டப்பட்டது.
பள்ளியின் தலைவர் பன்னீர் தலைமை வகித்து காமராஜர் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தாளாளர் மாதவி பன்னீர் முன்னிலை வகித்தார். நிர்வாக இயக்குனர்கள் செந்தூரி, யோகதர்ஷினி, கல்கனி ஆகியோர்கள் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு பேச்சு, ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
பள்ளி ஆசிரியர்கள் ரகோத்தமன், செல்வி ஆகியோர் காமராஜரின் சிறப்புகள் குறித்து பேசினர். விழாவுக்கான ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் ராஜ்குமார், துணை முதல்வர் செல்வராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.
அரசம்பட்டி ஸ்ரீ இராமகிருஷ்ணா பள்ளி: காமராஜர் பிறந்த நாளையொட்டி, அரசம்பட்டி ஸ்ரீஇராமகிருஷ்ணா கல்வி அறக்கட்டளை மற்றும் மத்தூர் சிடிவி மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
பள்ளி முதல்வர் வெங்கடேசன் அனைவரையும் வரவேற்றார், கல்வி ஆலோசகர் மாதேஸ், சரளா மாதேஸ், அறங்காவலர் ஜெயந்தி ஆகியோர் தலைமை வகித்தனர். தாளாளர் இரஞ்சித்குமார், கீதா இரஞ்சித்குமார் முன்னிலை வகித்தனர்.
மருத்துவ முகாமை மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் முருகன் தொடக்கிவைத்தார். மத்தூர் சிடிவி மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர் திருப்பதி, பெற்றோர்- ஆசிரியர் சங்க தலைவர் நடராஜ் ஆகியோர் பேசினர்.
முகாமில் பங்கேற்ற பொதுமக்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை ஜோதிலட்சுமி, பழனிசாமி மணிவண்ணன் வனிதா, சுவிதா, சந்தியா, சக்தி மற்றும் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.
மாடரஹள்ளி அரசுப் பள்ளி: மத்தூரை அடுத்த மாடரஹள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற காமராஜர் பிறந்த நாள் விழாவுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி தலைமை வகித்தார்.
காமராஜரின் வாழ்க்கை வரலாறு, அவர் கல்விக்கு ஆற்றிய தொண்டுகள், சாதனைகள், நற்பண்புகள் குறித்து மாணவர்கள் எடுத்துரைக்கப்பட்டது. விழாவில் மாவட்ட கல்வி அலுவலர் அகமது பாஷா, பள்ளி தலைமையாசிரியர் ரங்கன், வட்டார வள மைய மேற்பார்வையாளர் சங்கர், ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பாசிரியர்கள் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற விழாவுக்கு நகரத் தலைவர் ரகமத்துல்லா தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் எல்.சுப்பிரமணியன், முன்னாள் தலைவர் ஜேசுதுரைராஜ், விவசாயப் பிரிவுத் தலைவர் ராமநாதன், ராகுல் பேரவை மாவட்டத் தலைவர் விஜயராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கிருஷ்ணகிரியில் உள்ள காமராஜ் சிலைக்கு மாலை அணிவித்த காங்கிரஸ் கட்சியினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர்.
நாளந்தா சர்வதேச பொதுப்பள்ளியில் நடைபெற்ற கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட்டத்துக்கு பள்ளியின் நிறுவனர் கொங்கரசன், தாளாளர் சாமுண்டீஸ்வரி கொங்கரசன், நிர்வாக இயக்குநர்கள் கெசதமன், புவியரசன், முதல்வர் உமா உள்ளிட்டோர் காமராஜரின் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
ஒப்பதவாடி: ஒப்பதவாடி அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு பள்ளி தலைமையாசிரியர் மாதையன் தலைமை வகித்தார். மாணவ, மாணவிகளுக்கு பேச்சு, கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
பர்கூர்: பர்கூர் சுமைதூக்குவோர் சங்கம் சார்பில் பர்கூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற விழாவில் காமராஜரின் உருவப்படத்துக்கு பர்கூர் துணைக் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் மாலை அணிவித்தார். காவல் ஆய்வாளர் பழனிசாமி, சுமை தூக்குவோர் சங்கத் தலைவர் முரளி மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com