மூலிகைகளின் பயன்பாட்டை பள்ளிப் பாடத் திட்டத்தில் சேர்க்க வேண்டும்: மருத்துவர் மைக்கேல் செயராசு

மூலிகைகளின் பயன்பாடுகள் குறித்து பள்ளிப் பாடத் திட்டத்தில் கொண்டுவர வேண்டும் என்றார் மருத்துவரும், தமிழர் மருத்துவம் நூலின் ஆசிரியருமான மைக்கேல் செயராசு.

மூலிகைகளின் பயன்பாடுகள் குறித்து பள்ளிப் பாடத் திட்டத்தில் கொண்டுவர வேண்டும் என்றார் மருத்துவரும், தமிழர் மருத்துவம் நூலின் ஆசிரியருமான மைக்கேல் செயராசு.
 தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் தருமபுரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இலக்கியக் கலந்துரையாடல் கூட்டத்தில் அவர் மேலும் பேசியது: உணவுக்கும், மருந்துக்கும் சிறிய இடைவெளிதான். இதைப் புரிந்து கொண்டால் யாரும் மருந்து தயாரிக்கலாம். கடந்த 40, 50 ஆண்டுகளில் மக்களுக்கான மருந்துகளை முற்றிலுமாக அப்புறப்படுத்திவிட்டனர்.
 ஒரு காலத்தில் குழந்தையின் தாய்க்கும், அந்தத் தாயின் தாய்க்கும் பல மருந்துகள் தெரிந்திருந்தன. இப்போது அவை எதுவும் இல்லை. எல்லாவற்றுக்கும் "ஆன்டிபயாட்டிக்' மருந்துகளே வழங்கப்படுகின்றன.
 1960-க்கு முன்பு வரை கடலெண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காயெண்ணெய், நல்லெண்ணெய் ஆகிய 4 எண்ணெய்கள்தான் இருந்தன. அதன்பிறகு மலேசியாவில் இருந்து பாமாயில் இறக்குமதி செய்தார்கள். சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் என்றார்கள். 1990-க்குப் பிறகு நல்ல கொழுப்பு, கெட்ட கொழுப்பு எனப் பிரித்தார்கள்.
 இப்போது மீண்டும் நல்லெண்ணெய்தான் நல்லது என்பதைப் பற்றியே பேசுகிறார்கள். சுமார் 50 ஆண்டுகால இடைவெளியில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு யார் பொறுப்பு? "பிஎஸ்எம்எஸ்' படிப்புக்கு ரூ. 15 லட்சம் வரையிலும், "எம்பிபிஎஸ்' படிப்புக்கு ரூ. ஒரு கோடி வரையிலும் நன்கொடையாகக் கொடுத்து சேரும் மாணவர், படிப்பை முடித்துவிட்டு எப்படி சேவை செய்வார்?
 2009-ஆம் ஆண்டிலே விஷக் காய்ச்சலுக்கு நிலவேம்புக் குடிநீர் அருந்தச் சொல்லி பிரசாரத்தை மேற்கொண்டோம். அப்போது எங்களுக்கு எச்சரிக்கை விடுத்த அரசு அதிகாரிகள், பிறகு 2013-ல் அவர்களே நிலவேம்புக் குடிநீரைப் பரிந்துரைத்தார்கள்.
 முற்றிலும் வெயியில் நின்றுப் பணியாற்றுவோர் விளக்கெண்ணெய்யிலும், நிழலில் இருந்து பணியாற்றுவோர் நல்லெண்ணெய்யிலும் தலைக் குளித்தல் அவசியமானது. இப்போது ஏற்படும் பல்வேறு நோய்களுக்கும் காரணம் எண்ணெய் வைத்துத் தலைக் குளித்தலைக் கைவிட்டதே.
 குறைந்தபட்சம் மனிதர்கள் அறிந்து கொள்ள வேண்டிய மூலிகைகளைப் பற்றி மக்கள் மத்தியில் நம்பிக்கையை விதைக்க வேண்டும். அதற்காக மூலிகைப் பற்றிய பாடத் திட்டத்தை பள்ளிப் பருவத்திலேயே வைக்க வேண்டும் என்றார் மைக்கேல் செயராசு.
 கூட்டத்தை அறிவியல் இயக்க மாவட்டச் செயலர் சுஷீல்குமார் ஒருங்கிணைத்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com