மலைக் கிராமங்களுக்கான சிற்றுந்து சேவை மேற்கொள்ளப்படுமா?

தருமபுரி மாவட்டத்திலுள்ள மலைக் கிராமங்களின் மக்கள் தங்களுக்கு சிற்றுந்துப் போக்குவரத்துச் சேவையை அரசு பிரத்யேகமாகத் தொடங்க வேண்டும் என நீண்ட காலமாகக் கோரி வருகின்றனர்.

தருமபுரி மாவட்டத்திலுள்ள மலைக் கிராமங்களின் மக்கள் தங்களுக்கு சிற்றுந்துப் போக்குவரத்துச் சேவையை அரசு பிரத்யேகமாகத் தொடங்க வேண்டும் என நீண்ட காலமாகக் கோரி வருகின்றனர்.
 தருமபுரி மாவட்டம், மலைகள் சூழ்ந்த மாவட்டம். தாமரை இதழ்களைப் போல நிலப்பரப்பு இருப்பதால்தான் இந்த ஊருக்குத் "தகடூர்' என்ற வரலாற்றுப் பெயர் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 தருமபுரி நகருக்கு அருகே வத்தல் மலை உள்ளது. தார்ச் சாலை வசதி கொண்ட இந்த மலை மீது 11 கிராமங்கள் உள்ளன. ஏறத்தாழ 1,300 குடும்பங்கள் வசிக்கின்றன. எஸ்எஸ்எல்சி வரையிலான ஓர் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. சாமை, கேழ்வரகு உள்ளிட்ட சிறு தானியங்கள் இங்கே அதிகளவில் பயிரிடப்படுகின்றன.
 தோட்டக் கலைத் துறை சார்பில் தாவரவியல் பூங்கா அமைப்பதற்கான திட்டம் அரசிடம் உள்ளது. இத்தனை இருந்தும் இங்கே பேருந்துப் போக்குவரத்து இல்லை. நகரிலிருந்து "வத்தல் மலை' என்ற பெயரில் புறப்படும் அரசுப் பேருந்து மலையடிவாரத்திலேயே நின்றுவிடும்.
 பாப்பாரப்பட்டிக்கு அருகே "மலையூர்' உள்ளது. பெரியூர் என்றும் அழைக்கிறார்கள். 154 குடும்பங்களைக் கொண்ட ஒரேயொரு மலைக் கிராமம். 8ஆம் வகுப்பு வரை கொண்ட ஓர் அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது. சீத்தாப்பழம் இங்கே பிரதான சாகுபடி. இங்கே நல்ல தார்ச்சாலை உள்ளது. ஆனால், பேருந்துப் போக்குவரத்து இல்லை.
 இவ்விரு மலைகளில் வசிப்போர் நடந்தும், தனியார் வாகனங்களை வைத்துக் கொண்டும் தங்களது போக்குவரத்துத் தேவையை நிறைவு செய்கிறார்கள். மாணவர்களின் நிலை மிகவும் கவலைக்குரியதே.
 மேலும், பென்னாகரம் பகுதியில் ஏரிமலையில் ஒரேயொரு கிராமத்தில் சுமார் 150 குடும்பங்கள் வசிக்கின்றன. கோட்டூர் மலையில் உள்ள கிராமத்தில் சுமார் 100 குடும்பங்கள் உள்ளன. இவற்றுக்கு தார்ச்சாலையே இல்லை.
 அரூர் பகுதியிலுள்ள சித்தேரி மலையில் 63 மலைக் கிராமங்கள் உள்ளன. தார்ச்சாலை வசதியுள்ள சரிபாதி கிராமங்களுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்தும் உள்ளது. மீதமுள்ள பகுதிக்கு சாலை அமைத்தால் மட்டுமே பேருந்து இயக்க முடியும்.
 இந்த நிலையில், முதல் கட்டமாக தார்ச்சாலை வசதியுடன் இருக்கும் வத்தல்மலை மற்றும் மலையூருக்கு சிற்றுந்து வசதியை அரசு செய்துத் தர வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்படுகிறது. வத்தல்மலை சாலை போதிய அகலத்துடன் இல்லை என்ற குறையை சிற்றுந்து வசதியால் சரிசெய்ய முடியும்.
 திண்டுக்கல் போன்ற மலைகள் நிறைந்த மாவட்டங்களில் மலைப் பகுதிகளுக்குச் செல்ல சிற்றுந்துகள் நிறைய பயன்படுத்தப்படுகின்றன. "மக்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் சிற்றுந்து சேவையை தமிழக அரசு தொடங்க வேண்டும்' எனக் கோருகிறார் தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலர் ஜெ. பிரதாபன்.
 இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி பலமுறை போராட்டங்களையும் நடத்தியுள்ளதாக அவர் குறிப்பிடுகிறார். "பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்களுக்கு சிற்றுந்து வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதோடு, விவசாய விளைபொருள்களையும் கீழே எடுத்துவருவது சுலபமாக இருக்கும்' என்கிறார் பிரதாபன். இதற்காக மலைக் கிராமங்களுக்கான சிற்றுந்து சேவையை பிரத்யேகமாகவே அரசு தொடங்க வேண்டும். அவ்வாறு தொடங்கிய பிறகு, அதன் தொடர்ச்சியாக ஏரிமலை, கோட்டூர் மலை மற்றும் சித்தேரி மலைகளில் சாலை வசதியில்லாத இடங்களுக்கு சாலை வசதி செய்து கொடுத்து சிற்றுந்து சேவையை விரிவுபடுத்தலாம்.
 அரசு சிற்றுந்து சேவை தருமபுரிக்கு வருமா? என மலைக் கிராம மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com