பேச்சுவார்த்தையில் முடிவு: தனியார் நிறுவன பெண் தொழிலாளர்கள் பணிக்கு திரும்பினர்

கடத்தூரில் தனியார் நிறுவனத்தில் திங்கள்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண் தொழிலாளர்கள், பேச்சுவார்த்தை முடிவடைந்ததை அடுத்து பணிக்கு திரும்பினர்.

கடத்தூரில் தனியார் நிறுவனத்தில் திங்கள்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண் தொழிலாளர்கள், பேச்சுவார்த்தை முடிவடைந்ததை அடுத்து பணிக்கு திரும்பினர்.
பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், கடத்தூரில் தனியார் ஆடை வடிவமைப்பு நிறுவனம் இயங்கி வருகிறது. இதில் 300- க்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரிகின்றனர். இந்த நிறுவனத்தில் பணிபுரியும் பெண்கள் உள்ளிட்ட தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு, கூடுதல் பணிக்கான ஊதியம், கழிப்பிடம், குடிநீர் உள்ளிட்ட வசதிகள் மேம்படுத்தப்படவில்லையாம்.
இதையடுத்து, 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் திங்கள்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் அரூர் கோட்டாட்சியர் கவிதா, கிருஷ்ணகிரி மாவட்ட தொழிலாளர் ஆய்வாளர் பா.கோட்டீஸ்வரி ஆகியோர் முதல் சுற்றுப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதையடுத்து இரண்டாம் சுற்றுப்பேச்சுவார்த்தை தருமபுரியில் உள்ள தொழிலாளர் அலுவலகத்தில் தொழிலகப் பாதுகாப்பு சுகாதார இணை இயக்குநர் (ஒசூர்) சரவணன் தலைமையில் நடைபெற்றது. இதில் கிருஷ்ணகிரி தொழிலாளர் அலுவலர் (சமரசம்) தாமரைமணாளன், தொழிலகப் பாதுகாப்பு சுகாதார துணை இயக்குநர் சாந்தினி ஆகியோர் கலந்துகொண்டனர். நிறுவனத்தின் சார்பில் பிரதிநிதிகளும், தொழிலாளர்கள் சார்பில் தொழிற்சங்கத்தினரும் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தையின் முடிவில் தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதாக உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டம் முடிவடைந்து தொழிலாளர்கள் பணிக்கு
திரும்பினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com