அரூரில்  மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினர் காத்திருப்புப் போராட்டம்

அரூரில் மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினர் வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரூரில் மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினர் வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 அரூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற காத்திருப்புப் போராட்டத்துக்கு, சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் பி.டில்லிபாபு தலைமை வகித்தார்.
 வறட்சியால் பாதிக்கப்பட்ட சிறு மற்றும் குறு விவசாயிகள் அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். ஏரி, குளம், குட்டைகள் உள்ளிட்ட நீர்நிலைகளை தூர்வார வேண்டும்.
குடிநீர்த் தட்டுப்பாடு உள்ள கிராமப் பகுதியில் லாரிகள் மூலம் குடிநீர் வழங்க வேண்டும். அரூர் மற்றும் கம்பைநல்லூர் பேரூராட்சி பகுதிகளிலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் தொழிலாளர்களுக்கு வேலை வழங்க வேண்டும். அரூர் அரசு மருத்துவமனையில் மருத்துவ வசதிகளை மேம்படுத்த வேண்டும். ரேஷன் கடைகளில் அத்தியாவாசியப் பொருள்களை தடையின்றி வழங்க வேண்டும். வனப் பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் மின்வேலிகளை அமைக்க வேண்டும். அரூர் அம்பேத்கர் நகரில் பயனற்றுக் கிடக்கும் அரசு நிலத்தில் வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்க வேண்டும். அரூர் பகுதியில் மூடப்பட்டுள்ள டாஸ்மாக் மதுக் கடைகளை மீண்டும் திறப்பதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் இந்தப் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
 இதையடுத்து, ஜடையம்பட்டி, கம்மாளம்பட்டி உள்ளிட்ட இடங்களில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்களில் தகுதியான பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்படும் என வட்டாட்சியர் அ.செல்வராஜ் உறுதி அளித்தார். அதன்பேரில், காத்திருப்புப் போராட்டம் கைவிடப்பட்டது.
 இதில், கட்சியின் மாவட்டச் செயலர் ஏ.குமார், மலைவாழ் மக்கள் சங்க மாவட்டச் செயலர் எஸ்.பி.சின்னராசு, வட்டச் செயலர் கே.தங்கராஜ், வட்டக்குழு உறுப்பினர்கள் பி.வி.மாது, கே.என்.ஏழுமலை, ஆர்.மல்லிகா, எஸ்.தனலட்சுமி, பி.குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com