சாலை வசதிக்கு ஏங்கும்: சித்தேரி மலைவாழ் மக்கள்..! மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா ?

சித்தேரி ஊராட்சியில் தார்ச்சாலை வசதிக்காக  மலைவாழ் பழங்குடியின மக்கள் ஏங்கி வருகின்றனர்.

சித்தேரி ஊராட்சியில் தார்ச்சாலை வசதிக்காக  மலைவாழ் பழங்குடியின மக்கள் ஏங்கி வருகின்றனர்.
பாப்பிரெட்டிப்பட்டி வட்டம்,  சித்தேரி ஊராட்சியில் 60 -க்கும் அதிகமான குக்கிராமங்கள் உள்ளன.  இந்த ஊராட்சிக்கு உள்பட்ட அரசநத்தம்,  கலசப்பாடி, கோட்டக்காடு,  ஆலமரத்து வளவு,  கருக்கம்பட்டி ஆகிய மலை கிராமங்களில் 500 - க்கும் அதிகமான மலைவாழ் பழங்குடியின மக்களின் குடியிருப்புகள் உள்ளன.
அரசநத்தம், கலசப்பாடி ஆகிய இடங்களில் மலைவாழ் பழங்குடியினர் நல அரசு உண்டு உறைவிட நடுப் பள்ளிகள் உள்ளன.  மேலும்,  இந்தக் கிராமங்களில்  4 அங்கன்வாடி மையங்கள், ஒரு துணை சுகாதார நிலையம்,  ஒரு  நியாய விலைக்கடையும்  உள்ளன.  
சித்தேரி மலைத்தொடரின் அடிவாரத்தில் அமைந்துள்ள வாச்சாத்தியில் இருந்து அரசநத்தம்,  கலசப்பாடி மலை கிராமங்கள் சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவில் மிகவும் உயரமான மலைப் பகுதியில்  அமைந்துள்ளன.
இந்தக் கிராமங்களுக்கு அடர்ந்த வனப் பகுதியில் உள்ள சிறிய அளவிலான மண் சாலை குண்டும்,  குழியுமாக ஆபத்தான நிலையில் அமைந்துள்ளது.  இந்தக் கிராமங்களுக்கு டிராக்டர்,   இருசக்கர வாகனங்கள் மட்டுமே சென்றுவர முடியும்.
அவசர சிகிச்சைக்கான 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள்,   கார்,  லாரி  உள்ளிட்ட வாகனங்கள் சென்றுவர முடியாது.
வாகனப் போக்குவரத்து  இல்லாத காரணத்தால் இங்குள்ள விவசாயிகள் தங்களது விவசாய விளைபொருள்களை எடுத்துச் செல்வதற்கும்,  மருத்துவ வசதிக்குச் செல்லும் கர்ப்பிணிப் பெண்கள்,   8-ஆம் வகுப்புக்குப் பிறகு உயர்கல்வியைத் தொடரும் பள்ளி மாணவர்கள்,   கல்லூரிக்குச் செல்லும் மாணவ,  மாணவியரும் நாள்தோறும் நடந்தே சென்று வருகின்றனர்.
பழங்குடியின  மக்களுக்குப் போதிய சாலை வசதி,   மின்சாரம்,  வேலைவாய்ப்புகள் இல்லாத காரணத்தால் இந்தப் பகுதியைச் சேர்ந்த தொழிலாளர்கள் 7 பேர் ஆந்திர மாநிலத்தில் செம்மரம் வெட்டும் பணியில் ஈடுபட்டதாக கடந்த 2 வருடங்களுக்கு  முன்பு அந்த மாநில போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தனர்.
எனவே,  மலை கிராம மக்களுக்குத் தேவையான சாலை  வசதி,  வேலைவாய்ப்புகளை உருவாக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மலைவாழ் பழங்குடியின மக்களின் கோரிக்கையாக உள்ளது.


வாச்சாத்தி முதல் அரசநத்தம், கலசப்பாடி வரையிலும் மலைப் பகுதியில் தார்ச்சாலை அமைக்க வனத் துறையினர் தடையில்லா சான்றும், அனுமதியும் வழங்கியுள்ளனர்.
 தார்ச் சாலை அமைக்க  வனத் துறையினர் வழங்கிய நிலத்துக்கு ஈடாக மெணசி பகுதியில் சுமார் 8 ஏக்கர் நிலம் வனத் துறைக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த சாலை அமைக்கும் பகுதியில் சாலையோரம் சுமார்  160 மரங்கள் உள்ளன.  இந்த மரங்களை அகற்றுவதற்கு பசுமை தீர்ப்பாயம் அனுமதிக்க வேண்டும்.
 இதற்கு கால தாமதம் ஆகிறது.   இதனால் சித்தேரி ஊராட்சியில் அரசநத்தம்,  கலசப்பாடி உள்ளிட்ட  மலை கிராமங்களுக்கு தார்ச்சாலை அமைப்பதில் சுணக்கம் ஏற்படுகிறது.
 எனவே,   சித்தேரி மலைத்தொடரில் வசிக்கும் மலைவாழ் பழங்குடியின மக்களுக்குத் தேவையான சாலை வசதி,  மின்சாரம்,  குடிநீர்,  கல்வி,  மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் .
- சித்தேரி ஊராட்சியின் முன்னாள் தலைவர் வி.அழகேசன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com