வெள்ளச்சாரி ஏரியில் மதகு கட்டுமானப் பணி: தரமான பொருள்களை பயன்படுத்த கோரிக்கை

தருமபுரி அருகே வெள்ளச்சாரி ஏரியில் நடைபெற்று வரும் மதகு கட்டுமானப் பணிகளுக்கு தரமான பொருள்களை பயன்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தருமபுரி அருகே வெள்ளச்சாரி ஏரியில் நடைபெற்று வரும் மதகு கட்டுமானப் பணிகளுக்கு தரமான பொருள்களை பயன்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டம்,  நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட மாதேமங்கலம் ஊராட்சியில் உள்ளது வெள்ளச்சாரி ஏரி. வத்தல்மலைக்கு அருகில் உள்ள சுமார் 30 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியில், கடந்த சில மாதங்களுக்கும் முன்பு, ஏரிக்கரை பலப்படுத்துதல், இரு மதகுகள் கட்டுதல் ஆகியப் பணிகள் சுமார் ரூ.23 லட்சத்தில் மேற்கொள்ளப்பட்டு
வருகிறது.
இந்தப் பணிகள் தாமதமாக நடைபெற்று வந்ததால், கடந்த செப்டம்பர் மாதம் பெய்த மழையில் தாற்காலிகமாக அமைக்கப்பட்ட ஏரிக்கரை உடைந்து,  ஏரி நீர் முழுவதும் வெளியேறி விளைநிலங்களில் புகுந்து வீணாகியது. இதனால், கரையை ஒட்டியிருந்த கிணறுகள், பயிர்கள் சேதமடைந்தன. இதையடுத்து, வருவாய் கோட்டாட்சியர் ராமமூர்த்தி மற்றும் அதிகாரிகள் அந்த இடத்தில் பார்வையிட்டு, கட்டுமானப் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என ஒப்பந்ததாரருக்கு உத்தரவிட்டனர்.
இதையடுத்து, தற்போது, மதகுகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால், இப்பணிகளுக்கு தரமான பொருள்கள் பயன்படுத்தவில்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதனால்,  மீண்டும் கன மழை பெய்தால், மதகுகள் நீரில் கரைந்து பழுதாகும் எனக் கூறப்படுகிறது. எனவே, கட்டுமானப் பணிகளுக்கு தரமான பொருள்களை பயன்படுத்த வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.
இது குறித்து,  இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகி ப.பிரசாத் கூறியது: வெள்ளச்சாரி ஏரியில் ஏற்கெனவே,  மேற்கொள்ளப்பட்டு வந்த பராமரிப்புப் பணி குறித்த காலத்தில் முடிக்காததால், அண்மையில் பெய்த மழையின்போது கரை உடைந்து தண்ணீர் வீணாகியது.
தற்போது, மதகுகள் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிக்கு,  மணலை பயன்படுத்தாமல் கருங்கல் தூள் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. மேலும், மதகு சுவர்கள் தரமாக இல்லை.
இது தொடர்பாக, மாவட்ட ஆட்சியருக்கு புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது. எனவே, ஏரி பராமரிப்புப் பணிகளை ஆய்வு செய்து கட்டுமானப் பணிகளை தரமாக மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com