இடிந்து விழும் நிலையில் 40 ஆண்டு கால தருமபுரி பேருந்து நிலைய கட்டட மேற்கூரை

தருமபுரி புறநகரப் பேருந்து நிலையத்தில் கடைகள் அமைந்துள்ள கட்டடத்தின் மேற்கூரை பகுதி எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.

தருமபுரி புறநகரப் பேருந்து நிலையத்தில் கடைகள் அமைந்துள்ள கட்டடத்தின் மேற்கூரை பகுதி எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.
தருமபுரி நகரத்தின் மையப்பகுதியில் உள்ளது ராஜகோபால் புறநகரப் பேருந்து நிலையம். கடந்த 1978-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2-ஆம் தேதி சுமார் ரூ. 7 லட்சம் மதிப்பில் தருமபுரி பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது.
இப் பேருந்து நிலையத்தில் நாளொன்றுக்கு சுமார் 420 அரசுப் பேருந்துகளும், 120 தனியார் பேருந்துகளும் வந்து செல்கின்றன. தருமபுரியிலிருந்து சென்னை, பெங்களூரு, திருப்பதி, ஈரோடு, சேலம், கோவை, மதுரை உள்ளிட்ட பல்வேறு புறநகரங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. குறிப்பாக, கர்நாடக மற்றும் ஆந்திர மாநிலத்தை, தமிழகத்தின் கொங்கு மண்டலம் உள்ளிட்ட பிற பகுதிகளுடன் இணைக்கும் முக்கியப் பேருந்து நிலையமாக திகழ்கிறது.
அதேபோல, இப்பேருந்து நிலையத்தையொட்டியே நகரப் பேருந்து நிலையமும் உள்ளது. இதனால் புறநகர் பேருந்துகளில் பயணம் செய்ய வரும் பயணிகளும் நகரப் பேருந்துகளில் இங்கு வந்து பேருந்து மாறி செல்கின்றனர். இதனால் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் இப் பேருந்து நிலையத்துக்கு வந்து செல்கின்றனர்.
பேருந்து நிலையத்தில் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் நீண்ட வரிசையில் கடைகள் அமைக்கப்பட்டு ஒப்பந்தம் மூலம் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இக்கடைகளின் முன்னால் பயணிகளுக்காக சுமார் 10 அடி இடைவெளி விடப்பட்டுள்ளது. இந்த இடத்தில் நூற்றுக்கணக்கான பயணிகள் பேருந்துகளுக்காக காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில், பயணிகள் அதிக எண்ணிக்கையில் வந்து செல்லும், இப்பேருந்து நிலையத்தில் தெற்கு பகுதியில் உள்ள கட்டத்தின் மேற்கூரை பராமரிப்பு இல்லாததாலும், அண்மைக் காலமாக தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணத்தாலும் பெயர்ந்து விழுந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன.
மேற்கூரை பெயர்ந்துள்ள இடத்தில் மழைநீர் சொட்டு சொட்டாக ஒழுகிக் கொண்டிக்கிறது.
இதனால்,  கட்டத்தின் மேற்கூரை முழுவதும் தற்போது ஆங்காங்கே கம்பிகளாக காட்சியளிக்கின்றன. இதனால், பேருந்துகளுக்காக கட்டடத்தின் கீழே காத்திருக்கும் பயணிகள், மேற்கூரை எப்போது கீழே விழுமோ?  என்ற அச்சத்துடன்
உள்ளனர்.
காணாமல் போகும் இருக்கைகள்: இந்தப் பேருந்து நிலையத்தில் பயணிகள் அமரும் வகையில் ஆங்காங்கே இருக்கைகள் பல ஆயிரம் மதிப்பில் போடப்பட்டன. தற்போது இருக்கைகள் இருந்த சுவடே இல்லை. இதனால் பயணிகள் தங்களது பேருந்து வரும் வரை நின்றுகொண்டே இருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. அதேபோல, பேருந்து நிலைய கூரையின் மேல் விளம்பர பதாகைகள் அமைக்க பயன்படுத்துவதற்காக கற்கள், ஜல்லிகள் என குப்பைகள்போல கொட்டப்பட்டுள்ளன.இவை நீண்ட நாள்களாக அப்புறப்படுத்தாமல் குப்பை மேடுகள் போல உருவாகியுள்ளது.
கட்டடம் கட்டப்பட்டு 40 ஆண்டுகளுக்கும் மேல் ஆவதால் எப்போது வேண்டுமானாலும் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே,  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கூரைகளை சீரமைக்க வேண்டும்.
அத்துடன்  போதிய இருக்கை வசதிகளும் செய்து கொடுக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்துகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com