டெங்கு காய்ச்சலுக்கு வலி நீக்கும் மாத்திரைகள் உகந்ததல்ல: சுகாதாரத் துறைச் செயலர் எச்சரிக்கை

வலி நீக்கும் மாத்திரைகள் டெங்கு காய்ச்சலுக்கு உகந்ததல்ல என்றும்  மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்தகங்களில் மருந்துகளை

வலி நீக்கும் மாத்திரைகள் டெங்கு காய்ச்சலுக்கு உகந்ததல்ல என்றும்  மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்தகங்களில் மருந்துகளை வாங்கிச் சாப்பிடக் கூடாது என்றும் சுகாதாரத் துறைச் செயலர் ஜே. ராதாகிருஷ்ணன் கூறினார்.
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் காய்ச்சல் பிரிவை வியாழக்கிழமை ஆய்வு செய்த  பின்னர், அவர் நிருபர்களிடம் மேலும் கூறியதாவது:-
நிலவேம்பு குடிநீர் குறித்து தவறான செய்திகள்: நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் வகையில் நிலவேம்பு குடிநீர் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் வழங்கப்பட்டு வருகிறது. நிலவேம்பு குறித்து தவறான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.  அது தவறு.  நிலவேம்பு குறித்து 40-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி முடிவுகள் உள்ளன. யாருக்கேனும் சந்தேகம் இருந்தால் அந்த ஆராய்ச்சி முடிவுகளை வழங்கத் தயாராக உள்ளோம்.
நிலவேம்பு அங்கீகரிக்கப்பட்ட இந்திய மருத்துவம்தான். பல்வேறு ஆராய்ச்சிகளுக்குப் பிறகு, சித்த மருத்துவர்களின் ஆலோசனைப்படி நிலவேம்புக் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
டெங்கு கொசுக்கள் உற்பத்தி ஏன்? இந்த ஆண்டின் தொடக்கத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டதால்,  பொதுமக்கள் தங்களின் தேவைகளுக்காகத் தொட்டிகளில் தண்ணீரை சேமித்து வைத்தனர். அப்போது அதனை முறையாக மூடாமல் இருந்ததால் டெங்கு பரப்பும் கொசுப்புழுக்கள் உற்பத்தி அதிகரித்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. பெரும்பாலான இடங்களில் இதுதான் பிரதானக் காரணமாக இருந்துள்ளது.
புதிய கட்டடப் பணிகள் நடைபெறும் இடங்களில் தண்ணீர் தொட்டிகளில் தேக்கி வைக்கப்படுகிறது. உள்ளாட்சித் துறைப் பணியாளர்கள் இந்த இடங்களிலும் ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. நல்ல தண்ணீரில் உற்பத்தியாகும் கொசுக்களை அழிப்பதைத் தவிர டெங்கு பரவலைத் தடுக்க வேறு வழியில்லை. தடுப்பு மருந்து எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
போலி மருத்துவர்கள் மீது நடவடிக்கை:
டெங்கு விழிப்புணர்வுக்காக தருமபுரி மாவட்டத்தில் 12 ரதங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த மாவட்டத்திலுள்ள போலி மருத்துவர்களைக் கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் போதிய அளவு ரத்தம் இருப்பு உள்ளது என்றார் ராதாகிருஷ்ணன்.
இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் கே. விவேகானந்தன் கூறியதாவது:-
தருமபுரி மாவட்டத்திலுள்ள 32 துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தலைமையில் தலா 100 பேர் கொண்ட  குழுக்கள்
அமைக்கப்பட்டுள்ளன. இவர்கள் தினமும் காலை 6 மணி முதல் சுகாதாரப் பணிகளைத் தொடங்குகின்றனர்.
முன்னதாக,  காரிமங்கலம்,  பி. கெட்டூர்,  பாலக்கோடு அரசு மருத்துவமனைகளுக்கு சுகாதாரத் துறைச் செயலர் நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.
அப்போது,  மருத்துவக் கல்லூரி முதல்வர் சீனிவாச ராஜு,  மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் பொன்னுராஜ், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் ஜெகதீஷ்குமார்,  மாவட்ட சித்த மருத்துவர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com