குழந்தைகளுக்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு: அரசு, தனியார் மருத்துவமனைகளில் அலைமோதும் கூட்டம்

தருமபுரி மாவட்டத்தில் காய்ச்சல் பாதிப்பு காரணமாக நாள்தோறும் நூற்றுக்கணக்கான குழந்தைகள் அரசு, தனியார்

தருமபுரி மாவட்டத்தில் காய்ச்சல் பாதிப்பு காரணமாக நாள்தோறும் நூற்றுக்கணக்கான குழந்தைகள் அரசு, தனியார் மருத்துவமனைகளுக்கு அழைத்துவரப்படுகின்றனர். இதனால், அனைத்து மருத்துவமனைகளிலும் குறிப்பாக குழந்தைகள் சிறப்பு சிகிச்சை மருத்துவமனைகளில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகின்றன.
குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியோர்களுக்கும் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். டெங்கு காய்ச்சலைத் தொடர்ந்து தற்போது அதிகரித்துவரும் வைரஸ் காய்ச்சலால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க மாவட்ட நிர்வாகம் சிறப்பு கவனம் செலுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு வலுத்து வருகிறது.
முன்னெச்சரிக்கை இல்லாமலும், உடனடியாக சிகிச்சை பெறாததாலும் காய்ச்சல் தீவிரம் அதிகரித்து பலர் சேலம், பெங்களூரு என வெளியூர்களுக்குச் சென்று அதிக பணம் செலவழித்து சிகிச்சை பெறும் சூழல் உருவாகியுள்ளது. கடந்த ஒரு வாரமாக திடீரென ஏற்படும் காய்ச்சல் தீவிரத்தால் பாதிக்கப்படும் குழந்தைகளை அழைத்து வரும் பெற்றோர், தருமபுரியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் காலை முதலே காத்திருந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். சுகாதார முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டிருந்தாலே காய்ச்சல் தொற்றை தவிர்த்திருக்க முடியும். இனியாவது, மாவட்ட சுகாதாரத் துறை கிராமங்கள்தோறும் சுகாதார விழிப்புணர்வு முகாமை நடத்தவும், உள்ளாட்சி மூலம் கொசு ஒழிப்பு, குடிநீர் சுகாதாரத்தை பராமரிக்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் முனைப்பு காட்ட வேண்டும்.
காச்சல் தொற்று குறித்து இணை இயக்குநர் (நலப் பணிகள்) பொன்னுராஜ் கூறியது:
தருமபுரி மாவட்டத்தில் காய்ச்சல் தடுப்பு தொடர்பான பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் ஏற்கெனவே எடுக்கப்பட்டுள்ளது. தற்போது, குழந்தைகள் உள்ளிட்டோருக்கு ஏற்பட்டுவரும் காய்ச்சல் சீதோஷ்ணநிலை மாற்றத்தால் வருகிற சாதாரண காய்ச்சலாகும்.
இதைத் தடுக்க தனி மனித சுகாதாரம் அவசியம். குடிநீரை காய்ச்சி பருகுவது அவசியம். மேலும், தருமபுரி மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன் ஆலோசனையின் பேரில், சுகாதாரத் துறை, உள்ளாட்சி அமைப்புகள் உள்ளிட்ட அனைத்துத் துறையினரும் இணைந்து மாவட்டம் முழுவதும் தூய்மை குறித்து விழிப்புணர்வு மேற்கொள்ளப்படுவதோடு சுகாதாரப் பணிகள் முடுக்கிவிடப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com