அரசுப் போக்குவரத்து துறையில் ஏற்படும் இழப்பை மக்கள் மீது திணிக்கக் கூடாது

அரசுப் போக்குவரத்து துறையில் ஏற்படும் இழப்பை மக்கள் மீது திணிக்கக் கூடாது என முன்னாள் அமைச்சர் க.பொன்முடி தெரிவித்தார்.

அரசுப் போக்குவரத்து துறையில் ஏற்படும் இழப்பை மக்கள் மீது திணிக்கக் கூடாது என முன்னாள் அமைச்சர் க.பொன்முடி தெரிவித்தார்.
தருமபுரி வள்ளலார் திடலில் பேருந்துக் கட்டண உயர்வைக் கண்டித்து திமுக தோழமைக் கட்சிகள் சார்பில் பொதுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்டச் செயலர் தடங்கம் பெ.சுப்ரமணி எம்.எல்.ஏ. தலைமை வகித்தார்.  கூட்டத்தில்,  முன்னாள் அமைச்சரும்  சட்டப்பேரவை உறுப்பினருமான  க.பொன்முடி  பேசியது: மக்களின் தேவைகள் குறித்து ஆட்சியாளர்களுக்கு கவலை இல்லை. தமிழகத்தில் எப்போது ஆட்சி மாற்றம் வரும் என மக்கள் எதிர்பார்ப்போடு உள்ளனர். பேருந்துக் கட்டணத்தை பல மடங்கு உயர்த்திவிட்டு,  திமுக ஆட்சியில் பேருந்துக் கட்டணத்தை உயர்த்தியதாகக் கூறி வருகின்றனர். திமுக ஆட்சியிலிருந்த கடைசி 10 ஆண்டுகளில் கி.மீட்டருக்கு 4 பைசா மட்டுமே உயர்த்தினோம்.  ஆனால், அதனைத் தொடர்ந்து 2001, 2011 மற்றும் தற்போது என மூன்று முறை அதிமுக ஆட்சியில் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. போக்குவரத்துத் துறையில் இயல்பாக இழப்பீடு ஏற்படும்.  ஏனெனில், அது சேவைத் துறை. திமுக ஆட்சியிலிருந்து போதும் போக்குவரத்துத் துறையில் இழப்பு ஏற்பட்டது. ஆனால், அதனை சரிசெய்ய அரசே மானியம் வழங்கியது. எனவே, போக்குவரத்து துறையில் இழப்பு எனக் கூறி, அதனை மக்கள் மீது திணிக்கக் கூடாது. மாறாக, தமிழக அரசு மானியம் வழங்கி அதனை சரிசெய்ய வேண்டும். ஆகவே, தற்போது உயர்த்தப்பட்ட பேருந்துக் கட்டணத்தைத் திரும்பப் பெற வேண்டும். அதுவரை திமுக தலைமையிலான தோழமைக் கட்சிகளின் போராட்டம் தொடரும் என்றார்.
கூட்டத்தில், பென்னாகரம் சட்டப் பேரவை உறுப்பினர் பி.என்.பி.இன்பசேகரன்,  காங்கிரஸ்  மாவட்டத் தலைவர் கோவி.சிற்றரசு, முன்னாள் எம்.பி. ஆர்.தாமரைச்செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  மாவட்டச் செயலர் ஏ.குமார், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலர் எஸ்.தேவராஜன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகி கேப்டன் துரை, முன்னாள் எம்.எல்.ஏ. பி.டில்லிபாபு, திராவிடர் கழக மாநில அமைப்புச் செயலர் ஊமை ஜெயராமன், மதிமுக மாவட்டச் செயலர் தங்கராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com