ஊத்தங்கரை வட்டாரத்தில் செம்மை கரும்பு சாகுபடி தொழில்நுட்பம்

ஊத்தங்கரை வட்டாரத்தில் செம்மை கரும்பு சாகுபடி தொழில்நுட்பம் மேற்கொள்ளப்படுகிறது.

ஊத்தங்கரை வட்டாரத்தில் செம்மை கரும்பு சாகுபடி தொழில்நுட்பம் மேற்கொள்ளப்படுகிறது.
செம்மை கரும்பு சாகுபடியானது குழி தட்டுகளின் மூலம் நிழல்வலைக் கூட நாற்றங்கால்களில் கரும்பு நாற்றுகளை உற்பத்தி செய்து, 25 முதல் 35 நாள்களில் நாற்றுகளை வயலில் நடவு செய்வதாகும்.
ஒரு விதைப் பருசீவல் மூலம் நாற்று உற்பத்தி செய்யும் முறை முக்கியமானதாகும். இதில் ஏக்கருக்கு விதைக்கரனை 4 டன்னுக்குபதிலாக 5,000 முதல் 6,000 கரும்பு நாற்றுகள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.
இம் முறையில் நட்ட 30-ஆவது நாள் குருத்து பகுதியை கிள்ளிவிடுவதன் மூலம் ஒரு குருத்துக்கு அதாவது ஒருநாற்றிலிருந்து 10 முதல் 15 குருத்துகள் வெடித்து அவை கரும்பாக மாறி அதிக மகசூல் கிடைக்கும். இம்முறை மூலம் பெறப்படும் ஒரு கரும்பின் எடை 2 - 3 கிலோ அதிகரிக்கிறது.
நாற்றுவளர்ப்பு: ஒருபருசீவல் விதைநேர்த்தி 1 கிலோ யூரியாவுடன் 50 கிராம் கார்பென்டசிம், 200 மி.கி. மாலத்தியான் 100 லி. நீரில் கரைத்து பருசீவலை 15 நிமிடம் ஊறவைத்து பின் 15 நிமிடம் நிழலில் உலரவைப்பதால் முளைப்புத்திறன் ஊக்குவிக்கப்படுகிறது.
உயிரியல் முறையில் விதை நேர்த்தி 2 கிலோ டிரைகோ டெர்மாவிரிடியை 100 லி. நீரில் கரைத்து ஒரு பருசீவல் 15 நிமிடம் ஊறவைத்து பின் 15 நிமிடம் நிழலில் உலரவைக்க வேண்டும். விதை நேர்த்திக்குப் பின் 1சதவீதம் சுண்ணாம்பு நீரை தெளித்து சாக்குப்பையில் 3-4 நாள்களுக்கு கட்டி விடவேண்டும். 4 வதுநாள் சாக்குப்பையிலிருந்து நன்கு சீராக முளைத்த பருசீவலை தேர்வு செய்து குழி தட்டுக்களில் பரப்பி நாற்று உற்பத்தி செய்யப்படுகிறது. விதை நேர்த்தி மூலம் கரும்பில் ஏற்படும் பூச்சி நோய்த் தாக்குதலில் இருந்து பாதுகாக்கப்படுகிறது.
நடவுக்குப் பின் செய்யவேண்டியது: நட்ட 30-ஆவது நாள் அதாவது 2 அல்லது 3 குருத்துகள் வந்தபின் தாய்குருத்தை பூமிக்குமேல் 1 இன்ச் விட்டு வெட்டி விட 10-15 குருத்துக்கள் வெடிக்கும் மற்றும் ஒரே சீராக வளர்ச்சியடைந்து முதிர்ச்சியடையும். இம்முறையில் அதிக இடைவெளியில் ஊடுபயிர் சாகுபடி செய்வதன் மூலம் மண்ணின் வளத்தை பாதுகாப்பதுடன், 2 வகையில் வருமானம் கிடைக்கும். நட்ட 30, 60, 90-ஆவது நாளில் குருத்து 45-ஆவது நாளில் மண் அணைப்பதால் காற்றோட்டம் பெருகி வேர்களின் வளர்ச்சியை அதிகப்படுத்தும். சர்க்கரை உற்பத்திக்கு முதல் 8-10 இலைகள் போதுமானதால் 5 மற்றும் 7-ஆவது மாதங்களில் தேவையற்ற அடியில் உள்ள காய்ந்த மற்றும் பச்சை இலைகளைஅகற்றுவதன் மூலம் சர்க்கரை உற்பத்தியை அதிகப்படுத்தலாம்.
நிழல்வலை கூட முறையில் கரும்பு நாற்றங்கால் அமைக்கும் விவசாயிகளுக்கு ரூ.75,000 மானியம் வழங்கப்படுகிறது மேலும் கரும்பு நாற்று நடும் விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானியமாக ஏக்கருக்கு ரூ.4,500 வழங்கப்படுகிறது. அத்துடன் சொட்டுநீர்ப் பாசனம் அமைக்கும் சிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியம் மற்றும் பெருவிவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.
ஊத்தங்கரை வட்டாரத்தில் மொத்தம் 11 நிழல்வலைக் கூடம் அமைக்கப்பட்டு கரும்பு நாற்று உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. எனவே, அதிக மகசூலை அளிக்கும் கரும்பு நாற்றுகளை நடவு செய்ய விவசாயிகள் முன் வரவேண்டும் எனவும், செம்மை கரும்பு சாகுபடி செய்ய ஆர்வமுள்ள விவசாயிகள் ஊத்தங்கரை வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி பதிவு செய்து பயன்பெறலாம் என ஊத்தங்கரை வேளாண் உதவி இயக்குநர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com