கர்நாடகத்தில் திறந்துவிடப்பட்ட தண்ணீர் இன்று ஒகேனக்கல்லை வந்தடையும்

கர்நாடக மாநிலம், கபினியிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் தமிழக எல்லையான ஒகேனக்கல் பிலிகுண்டுலுவுக்கு ஞாயிற்றுக்கிழமை காலை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கர்நாடக மாநிலம், கபினியிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் தமிழக எல்லையான ஒகேனக்கல் பிலிகுண்டுலுவுக்கு ஞாயிற்றுக்கிழமை காலை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில்,  காவிரியில் நீர் வரத்தை அளவிட மத்திய நீர் ஆணைய அதிகாரிகள், பொதுப் பணித் துறையினர் அங்கு முகாமிட்டுள்ளனர்.
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக பருவமழை பெய்து வருகிறது.  இதனால், அங்குள்ள கபினி,  ஹேமாவதி, கிருஷ்ணராஜ சாகர் ஆகிய அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது.  கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், ஜுன் 14 முதல் படிப்படியாக 35 ஆயிரம் கன அடி உபரிநீர் காவிரியில் திறந்து விடப்பட்டது.
இந்த தண்ணீர் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை சனிக்கிழமை மாலை வந்தடையும் என எதிர்பார்க்கப்பட்டது.  மத்திய நீர் ஆணைய அதிகாரிகள்,  பொதுப்பணித் துறை அதிகாரிகள் தொடர்ந்து நீர் வரத்தைக் கண்காணித்து வந்தனர்.  ஆனால்,  சனிக்கிழமை மாலை வரை காவிரியாற்றில் நொடிக்கு சுமார் 1,300 கன அடி மட்டுமே வந்து கொண்டிருந்தது.
கர்நாடகம் திறந்துவிட்ட தண்ணீர் அந்த மாநிலத்தில் உள்ள கொள்ளேகால் பகுதிக்கு வெள்ளிக்கிழமை வந்தடைந்ததாகவும்,  தமிழக எல்லையான ஒகேனக்கல் அருகே உள்ள பிலிகுண்டுலுவை ஞாயிற்றுக்கிழமை காலை வந்தடையும் என மத்திய நீர் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com