ரூ.1.50 லட்சத்தில் விரிவாக்கம் செய்தும் வாகன நிறுத்தும் இடமாக தொடரும் சாலை!

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி எதிரே, சுமார் ரூ.1.50 லட்சம் மதிப்பில் சாலை விரிவாக்கம் செய்தும், வாகன ஓட்டிகள் பயன்பாட்டுக்கு வராமல் சுற்றுலா வேன்கள் நிறுத்துமிடமாகவே தொடர்கிறது. 

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி எதிரே, சுமார் ரூ.1.50 லட்சம் மதிப்பில் சாலை விரிவாக்கம் செய்தும், வாகன ஓட்டிகள் பயன்பாட்டுக்கு வராமல் சுற்றுலா வேன்கள் நிறுத்துமிடமாகவே தொடர்கிறது. 
தருமபுரி நேதாஜி புறவழிச் சாலையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை எதிரில் நிலவள வங்கி அருகே பேருந்து நிறுத்தம் உள்ளது. அதனைக் கடந்து, சிறிது தொலைவில் வெண்ணாம்பட்டி,  ரயில் நிலையம் செல்லும் சாலை பிரிகிறது. அதேபோல, அரசு மருத்துவமனை புறநோயாளிகள் கட்டடம் எதிரே உள்ள நுழைவுவாயில் அருகே, நகருக்குள் வரும் பயணிகளை ஏற்றி, இறக்க பேருந்துகள் நிறுத்தப்படுகின்றன. இதனால், இச்சாலையில் இருபுறமும் பகல் வேளைகளில் அதிக அளவு நெரிசல் ஏற்பட்டு, போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால், வாகனங்கள் அவ்வப்போது நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இச்சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை எதிரே ஏற்கெனவே, உள்ள நெடுஞ்சாலையின் இருபுறமும் 24 அடி அகலத்திற்கும், அதேபோல சுமார் அரை கி.மீ. நீளத்துக்கும், சாலையை விரிவாக்கம் செய்து அங்கு பேருந்து நிறுத்தங்கள் அமைக்கும் பணி நெடுஞ்சாலைத் துறை சார்பில், ரூ.1.50 லட்சம் மதிப்பில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. பல மாதங்களாக நடைபெற்று வந்த இப்பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளது. சாலை விரிவாக்கம் செய்வதற்கு முன் காலியாக இருந்த இடத்தில் சுற்றுலா வாகனங்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தன. இந்த நிலையில் பணிகள் முடிந்தும், அந்த இடம் வாகன ஓட்டிகளின் பயன்பாட்டுக்கு வராமல், மீண்டும் அந்த இடத்தில் சுற்றுலா வேன்கள், பொக்கலைன் இயந்திரங்கள் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், பல லட்சம் அரசு நிதியை செலவு செய்து சாலை விரிவாக்கம் செய்த பின்பும் அத்திட்டத்தின் நோக்கம் நிறைவேறாமலேயே உள்ளதாகவும், அதேபோல, நகருக்குள்ளும் நேதாஜி புறவழிச்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி போதிய அளவு சாலையை விரிவாக்கம் செய்யவும் நெடுஞ்சாலைத் துறை மற்றும் போக்குவரத்து காவல்துறையினர்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள்
வலியுறுத்துகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com