காலி பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி "பொதுமேடை' அமைத்து போராட்டம்: அரசு ஊழியர் சங்கத் தலைவர் அறிவிப்பு

மாநிலம் முழுவதும் உள்ள 3.5 லட்சம் காலி பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி, அனைத்துக் கட்சியினர், சமூக அமைப்பினரையும் இணைத்து பொது மேடை அமைத்து போராட்டம் நடத்தவுள்ளதாக தமிழ்நாடு அரசு ஊழியர்

மாநிலம் முழுவதும் உள்ள 3.5 லட்சம் காலி பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி, அனைத்துக் கட்சியினர், சமூக அமைப்பினரையும் இணைத்து பொது மேடை அமைத்து போராட்டம் நடத்தவுள்ளதாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மு. சுப்பிரமணியன் தெரிவித்தார்.
தருமபுரியில் சனிக்கிழமை நடைபெற்ற அரசு ஊழியர் சங்க மாவட்ட பேரவைக் கூட்டத்தில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
மாநிலம் முழுவதும் 3.5 லட்சம் காலி பணியிடங்கள் உள்ளன. காவல் துறையில் 8 ஆயிரம், வளர்ச்சித் துறையில் 4,800 என பல்வேறு துறைகளில் காலி பணியிடங்கள் ஏராளமாக உள்ளன. காலி பணியிடங்களை நிரப்பினால் பணிச் சுமை குறையும், நலத் திட்டங்களை எளிதில் மக்களிடம் சேர்க்க முடியும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும். ஆனால், நேரடியாக அரசு பணியிடங்களை நிரப்புவதை விடுத்து, தனியார் மூலம் நிரப்பும் வகையிலான அரசாணை 56- என்ற ஒன்றை மாநில அரசு வெளியிட்டிருக்கிறது. இது தவறான நடவடிக்கை என ஏற்கெனவே ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருக்கிறோம். தற்போது பிரச்னை தீவிரமாக இருப்பதால், காலி பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி அனைத்துக் கட்சியினர், சமூக நல அமைப்பினரை இணைத்து பொது மேடையை உருவாக்கி போராடத் திட்டுள்ளோம்.
தருமபுரி மாவட்டத்தில் கடத்தூர், ஏரியூர் ஆகிய ஒன்றியங்களை புதிதாக உருவாக்குவதென அரசாணை வெளியிட்டு நீண்ட காலமாகியும் இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை. எனவே, தனியாக இவ்வொன்றியங்களுக்கான பணியிடங்களை உருவாக்கி, செயல்படுத்த வேண்டும். தருமபுரி மாவட்டத்தில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தொழிற்பேட்டைகளை நிறுவுவதற்கான பணிகளை விரைவுபடுத்த வேண்டும்.
அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர், ஆசிரியர்களின் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு சார்பில் வரும் மார்ச் 24-ஆம் தேதி அந்தந்த மாவட்டங்களில் பேரணியும், மே 8ஆம் தேதி சென்னையில் லட்சம் பேர் பங்கேற்கும் கோட்டை முற்றுகைப் போராட்டமும் நடத்தப்படவுள்ளது.
இந்தப் போராட்டத்தைத் தவிர்க்க வேண்டுமானால், அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களை மாநில அரசு அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வர வேண்டும் என்றார்.
கூட்டத்துக்கு மாவட்டத் தலைவர் எம். சுருளிநாதன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் ஏ. சேகர் வேலை அறிக்கையையும், பொருளாளர் கே. புகழேந்தி வரவு செலவு அறிக்கையையும் தாக்கல் செய்து பேசினர். சிஐடியு மாவட்டச் செயலர் சி . நாகராசன் வாழ்த்தி பேசினார். மாநிலத் துணைத் தலைவர் எஸ். பார்த்திபன் நிறைவுரையாற்றினார். முன்னதாக, மாவட்டத் துணைத் தலைவர் பி.எஸ். இளவேனில் வரவேற்றார். முடிவில் இணைச் செயலர் சி. காவேரி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com