"வேளாண்மையில்தான் நாட்டின் இறையாண்மை உள்ளது'

ஒரு நாட்டின் இறையாண்மை என்பது அந்த நாட்டின் வேளாண்மையிலும், பாரம்பரியமான விதைகளிலும் அடங்கியுள்ளதாக சூழலியல் எழுத்தாளர் பாமயன் தெரிவித்தார்.

ஒரு நாட்டின் இறையாண்மை என்பது அந்த நாட்டின் வேளாண்மையிலும், பாரம்பரியமான விதைகளிலும் அடங்கியுள்ளதாக சூழலியல் எழுத்தாளர் பாமயன் தெரிவித்தார்.
தருமபுரி அறிவியல் இயக்கம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இலக்கியக் கலந்துரையாடல் கூட்டத்தில், தனது "அணுகுண்டும் அவரை விதைகளும்' என்ற நூல் குறித்து அதன் ஆசிரியர் எழுத்தாளர் பாமயன் பேசியது:
நாட்டு விதைகளையும், பாரம்பரிய விதைகளையும் அப்புறப்படுத்திவிட்டு, கலப்பின விதைகளையும், மரபீணி விதைகளையும் நமக்குள் திணிப்பது அணுகுண்டைவிடவும் மோசமான உயிரியல் போர். நாட்டின் இறையாண்மை என்பது அந்த நாட்டின் வேளாண்மை, பாரம்பரிய விதைகளில்தான் உள்ளது.
உலகப் போரின் போது நம்முடைய உணவு தானியப் பொருள்களைத் திரட்டி அனுப்பி விட்டு நம்மிடையே ஏற்படுத்தப்பட்டதுதான் அப்போதைய பஞ்சமும், பட்டினியும். இதைக் காரணம் காட்டி மேலைநாடுகளில் இருந்து கோதுமை இறக்குமதி செய்யப்பட்டது. அதன்பிறகு தீவிர சாகுபடி இயக்கம் தொடங்கப்பட்டது. பிற்காலத்தில் அதுவே பசுமைப் புரட்சியானது. வறட்சியைத் தாங்கி, பூச்சித் தாக்குதலைத் தாங்கி வளரக் கூடியவை நம்முடைய பாரம்பரிய விதைகள். ஆனால், கலப்பின விதைகளுக்கு தண்ணீரும் அதிகம் தேவைப்படும், பூச்சிக் கொல்லி மருந்துகளும் அதிகம் தேவைப்படும். 
வசதியான விவசாயிகள் ஆழ்துளைக் கிணறு அமைத்து தண்ணீரை உறிஞ்சிக் கொள்வார்கள். பெரும்பான்மையாக உள்ள சிறு, குறு விவசாயிகள் விவசாயம் என்ற தொழிலைவிட்டு ஓடிவிடுவார்கள்.
பூச்சிக் கொல்லி மருந்துகளால் விவசாயத்துக்கு நன்மை செய்யும் பூச்சிகளும் அழிந்துவிடுகின்றன. அடுத்து, தீமை செய்யும் பூச்சிகள் ஒவ்வொரு மருந்துக்கும் தன்னைத் தகவமைத்துக் கொண்டு அடுத்தடுத்த தலைமுறையில் வீரிய பூச்சிகளாக மாறிவிடுகின்றன. 
இதற்காக இன்னும் கூடுதலாக மருந்தின் சக்தியை ஏற்ற வேண்டும். விதையிலே பூச்சியைக் கொல்லும் ரசாயனங்கள் ஏற்றப்படுகின்றன. இவற்றை சாப்பிட்டால் மனிதர்களின் நிலை என்ன ஆவது. யூரியா, மண்ணையும் தண்ணீரையும் கூடுதலாகச் செறிவூட்டும். ஏற்கெனவே செடியிலிலுள்ள தண்ணீர் சத்து குறையும். அதனை ஈடு செய்ய பயிர்களுக்கு கூடுதல் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 
இதேபோல, களைகளை வேளாண்மைக்கு விரோதிகளாக கட்டமைத்துவிட்டார்கள்.  அப்படியல்ல. ஒரு செடி வளர்வதற்கு 16 வகையான சத்துகள் தேவைப்படும். மண்ணில் இல்லாத சத்துகளை- பற்றாக்குறையாக உள்ள சத்துகளை ஈடு செய்வதற்காக இயற்கை நமக்குக் களைகளைத் தருகிறது. 
அவற்றைப்  பிடுங்கி துண்டுதுண்டாக நறுக்கி அதே மண்ணில் போட்டுவிட்டால், வேறெந்த ஊக்க உரமும் பயிர்களுக்குத்  தேவையில்லை. ஆனால், களைகளை அகற்றுவதற்காக களைக்கொல்லிகள் என்ற பெயரில் மீண்டும் ரசாயன உரங்களை மண்ணில் கொட்டுகிறோம். இவையெல்லாமும் நமக்குத் தெரிந்தே இன்னமும் நடந்து கொண்டிருக்கிற சிக்கல்கள். 
உணவின் வழியே கொஞ்சம் கொஞ்சமாக நஞ்சு கலந்து 40 முதல் 45 வயதுக்குள் விதவிதமான அத்தனைத் தொற்றா நோய்களும் மனிதனுக்கு ஏற்படுகின்றன. மிகவும் தூய்மையானது என இதுவரை சொல்லப்பட்டு வந்த தாய்ப்பாலிலும் இந்த நஞ்சு கலப்பதாக அண்மையில் வெளியான ஆய்வுகள்
தெரிவிக்கின்றன. 
சத்தான உணவு குறித்து நமக்குள் நிறைய விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அந்தந்த மண்ணில் பாரம்பரியமாக என்ன பயிர்கள் விளைகின்றனவோ, அந்த விவசாய உற்பத்திப் பொருள்கள்தான் அந்தந்த மண்ணின் மக்களுக்கான சத்தான உணவு என்றார் பாமயன்.
கூட்டத்துக்கு கோ. சுகதேவ் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் சுஷீல்குமார் ஒருங்கிணைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com