தருமபுரியில் 483 கூட்டுறவுச் சங்கங்களுக்கு தேர்தல்: தேர்தல் ஆணையர் ராஜேந்திரன்

தருமபுரி மாவட்டத்தில் 11 வகையான 483 கூட்டுறவுச் சங்கங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது என்று கூட்டுறவுச் சங்கங்களின் தேர்தல் ஆணையர் ராஜேந்திரன் தெரிவித்தார். 

தருமபுரி மாவட்டத்தில் 11 வகையான 483 கூட்டுறவுச் சங்கங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது என்று கூட்டுறவுச் சங்கங்களின் தேர்தல் ஆணையர் ராஜேந்திரன் தெரிவித்தார். 
கூட்டுறவு சங்கத் தேர்தல் அலுவலர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை தருமபுரி மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி முன்னிலை வகித்தார். இக் கூட்டத்துக்கு, தலைமை வகித்து, மாநில கூட்டுறவுச் சங்கங்களின் தேர்தல் ஆணையர் ராஜேந்திரன் பேசியது:  தமிழ்நாடு மாநில கூட்டுறவுச் சங்கங்களின் தேர்தல் நடைமுறைகள் மார்ச் 6-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. தருமபுரி மாவட்டத்தில் 11 வகையான 483 கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது.  தற்போது, கூட்டுறவு அமைப்புகளில் உள்ள தலைவர்கள் அலுவலகம் உடனடியாக பூட்டப்பட வேண்டும்.  அவர்கள் பயன்படுத்தி வந்த அரசு வாகனங்களைத் திரும்பப் பெறவேண்டும். புதிய அறிவிப்புகள், பணி உயர்வு, இடமாற்றம் செய்தல் கூடாது. தேவைப்படும் இடங்களில் ஓய்வுபெற்ற  கூட்டுறவுத்துறை அலுலவர்களை  தேர்தல் பணியில் ஈடுபடுத்திக் கொள்ளலாம்.
மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில் இத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் நடத்தும் அலுவலர்கள் எந்த வித அச்சமின்றி, கூட்டுறவுத் தேர்தலை நடத்திட வேண்டும். வாக்காளர் பட்டியல் அலுவலர்கள் மற்றும் தேர்தல் அலுவலருக்கான பயிற்சி வகுப்புகள் முறையாக நடத்தப்பட்டுள்ளன. தேர்தல் நடைபெறும் சங்கங்களுக்கு வாக்குச் சீட்டினை அச்சிட்டு வழங்கிட முழுமையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்குச்சாவடி மையங்கள் கண்டறியப்பட்டு சுமார் 600 வாக்குப் பெட்டிகள் தயார் நிலையில் உள்ளன. தேர்தல் குறித்த அறிவிப்புகள் முறையாக வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் முறையாக, சுமூகமாக நடைபெற அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்றார்.
இக் கூட்டத்தில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பண்டி கங்காதர், மாநில கூட்டுறவுச் சங்கங்களின் தேர்தல் ஆணையச் செயலர் அந்தோணிசாமி ஜான்பீட்டர், மாவட்ட வருவாய் அலுவலர் அ.சங்கர், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர்கள் க.பாண்டியன், கி.ரேணுகா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com