வரலாற்றுச் சின்னங்களை பாதுகாக்க வலியுறுத்தல்

தருமபுரி மாவட்டத்திலுள்ள வரலாற்றுச் சின்னங்களை பாதுகாக்கவும், கல்லூரி மாணவர்கள்

தருமபுரி மாவட்டத்திலுள்ள வரலாற்றுச் சின்னங்களை பாதுகாக்கவும், கல்லூரி மாணவர்கள் அவற்றைப் பார்வையிடுவதற்கு ஏற்பாடு செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் அதியமான் சமூக வரலாற்று ஆய்வு மையம் வலியுறுத்தியுள்ளது.
அண்மையில் மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழியை நேரில் சந்தித்த மையத்தின் செயலர் தி.சுப்பிரமணியன், முன்னாள் எம்.பி. இரா.செந்தில், மையத்தின் பொருளாளர் வெ.ராஜன் ஆகியோர் அளித்த மனு விவரம்: தருமபுரி மாவட்டத்தில் லட்சம் ஆண்டுகளுக்கு முன் மனித இனம் வாழ்ந்துள்ளதற்கான அடையாளச் சின்னங்கள் இன்னமும்  உள்ளன. பாலக்கோடு வட்டத்தில், மல்லாபுரம், கும்மனூர் அருகிலுள்ள குன்றில் பெருங்கற்கால ஈமச் சின்னங்களான கல்திட்டைகள் ஏராளம் இருந்தன. தற்போது பெரும்பாலானவை அழிக்கப்பட்டு, மிகச்சில மட்டுமே எஞ்சியுள்ளன.
அதேபோல, மல்லாபுரம் அருகே இனக்குழுத் தலைவரின் நினைவாக அவர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அமைக்கப்படும் குத்துக்கல் உள்ளது. மல்லாபுரம் அருகேயுள்ள குத்துக்கல்கள் தென்னிந்தியாவில் காணப்படும் குத்துக்கல்களில் பெரியவை. பென்னாகரம் வட்டம், ஆதனூர் அருகேயுள்ள கல்வட்டம் மூன்றாயிரம் ஆண்டுகள் பழமையானது. தென்னிந்தியாவிலேயே சிதிலமடையாமல் இருக்கும் பெரிய கல்வட்டம் இதுவொன்றே.
தொல் பழங்குடிகளின் இந்த அரிய சின்னங்களை வேலியிட்டு பாதுகாத்து, தொடர்ந்து கல்லூரி மாணவர்கள் இவற்றைப் பார்வையிடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com