மாவட்ட வளர்ச்சிப் பணிகள்: கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் தமிழக அரசின் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட

தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் தமிழக அரசின் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தகவல் தொழில்நுட்பத் துறை அரசுச் செயலருமான டாக்டர் சந்தோஷ்பாபு வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தார். 
மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆய்வில் சந்தோஷ்பாபு பேசியது: வேளாண் துறையில் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டங்களை அறிந்துகொள்ள உழவன் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மாவட்டத்திலுள்ள 2.10 லட்சம் விவசாயிகளும் உழவன் செயலியைப் பயன்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பள்ளிக் கல்வித் துறை மூலம் மாணவர்கள் இடைநிற்றலைத் தவிர்க்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் உயர்கல்விக்கு செல்வோரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது பாராட்டுதற்குரியது.
மாவட்டத்திலுள்ள 251 ஊராட்சிகளிலும் இணையதள வேகம் 10 எம்பி முதல் 100 எம்பி வரை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அனைத்துத் துறைகளும் கணினி மயமாக்கப்பட்டு ஒரே இணையதளம், ஒரே செயலி என்ற நிலை உருவாக்கப்படும்.
ஜிபிஆர்எஸ் வாயிலாக அரசுத் துறை அலுவலர்கள் எந்த இடத்தில் பணியில் இருக்கிறார்கள் என்பதைக் கண்டறிவதற்கும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்க்கவும் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் சந்தோஷ்பாபு.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் எச்.ரஹமத்துல்லாகான், சார்-ஆட்சியர் ம.ப.சிவன்அருள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் எம்.காளிதாசன், வேளாண் இணை இயக்குநர் (பொ) வீராசாமி, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் அண்ணாமலை, அரூர் கோட்டாட்சியர் புண்ணியகோட்டி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com