மரக்கன்றுகளை குழந்தை போல் வளர்க்க வேண்டும்: நடிகர் விவேக்

மரக்கன்றுகளை தங்களின் குழந்தைகளைப் போல் வளர்க்க வேண்டும் என திரைப்பட நடிகர் விவேக் தெரிவித்தார்.
மரக்கன்றுகளை குழந்தை போல் வளர்க்க வேண்டும்: நடிகர் விவேக்


மரக்கன்றுகளை தங்களின் குழந்தைகளைப் போல் வளர்க்க வேண்டும் என திரைப்பட நடிகர் விவேக் தெரிவித்தார்.
தருமபுரி மாவட்டம், திப்பம்பட்டி அருகேயுள்ள பன்னிகுளம் கிராமத்தில் கலாம் பாய்ஸ் இளைஞர்கள் குழு மற்றும் கம்பைநல்லூர் ஸ்ரீ ராம் கல்வி நிறுவனங்கள் சார்பில், முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் பிறந்த நாள் விழா மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் விழா, ஸ்ரீ ராம் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் எம்.வேடியப்பன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவில், திரைப்பட நடிகர் விவேக் பேசியது : மரங்கள் நமக்கு தூய்மையான காற்றையும், ஆக்ஸிஜனையும் வாழ்நாள் முழுவதும் வழங்குகின்றன. நமது உடல் ஆரோக்கியத்தைப் பேணி காப்பது மரங்கள்தாம். எனவே, நாம் ஒவ்வொருவரும் மரங்களை தங்களின் குழந்தைகள் போல் வளர்க்க வேண்டும். அதிக மரங்கள் இருந்தால்தான் மழை வளம் பெருகும். எனவே, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் அனைவரும் மரங்களை வளர்க்க வேண்டும். வீடுகள், அலுவலகங்கள், பள்ளி வளாகங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் மரங்களை நட்டு வளர்க்க வேண்டும்.
தமிழக அரசு வரும் 2019 ஜனவரி 1-ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருள்களைத் தடை செய்துள்ளது. பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது வரவேற்கக் கூடியதாகும். எனவே, நாம் அனைவரும் பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்துவதை முற்றிலுமாகக் கைவிட வேண்டும். பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாற்றாக துணிப் பைகள், இயற்கை சார்ந்த பொருள்களைப் பயன்படுத்த வேண்டும். மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் என்னிடம் 10 லட்சம் மரக்கன்றுகளை நட வேண்டும் எனத் தெரிவித்தார். அதன்படி, 10 லட்சம் மரக்கன்றுகளை நட்டேன். பிறகு, ஒரு கோடி மரக்கன்றுகளை நட வேண்டும் என்று கலாம் கூறினார். இதையடுத்து, தற்போது 31 லட்சம் மரக்கன்றுகளை நட்டுள்ளேன். மரம் நடும் பணிகளைத் தொடர்ந்து செயல்படுத்துவேன் என்றார் அவர்.
முன்னதாக, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், பொதுமக்களுக்கு சுமார் 23 ஆயிரம் மரக்கன்றுகளை நடிகர் விவேக் வழங்கினார்.
இந்த விழாவில், கம்பைநல்லூர் ஸ்ரீ ராம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியின் நிர்வாக இயக்குநர் வே.தமிழ்மணி, மருதம் நெல்லி பாலிடெக்னிக் கல்லூரியின் தலைவர் கே.கோவிந்த், கோவை இந்துஸ்தான் கல்லூரி உதவிப் பேராசிரியர் எஸ்.மதிவாணன், கலாம் பாய்ஸ் இளைஞர் குழுவின் தலைவர் என்.அரவிந்தன், செயலர் அசோக், ஊர்த் தலைவர் ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com