"தொல்லியல் எச்சங்கள் கொட்டிக் கிடக்கும் அதியர்கள் ஆண்ட தகடூர்ப் பகுதிகள்'

தொல்லியல் எச்சங்கள் ஏராளம் கொட்டிக் கிடக்கும் பகுதியாக அதியர்களின் ஆட்சிக்குள்பட்ட தகடூர்ப் பகுதிகள்

தொல்லியல் எச்சங்கள் ஏராளம் கொட்டிக் கிடக்கும் பகுதியாக அதியர்களின் ஆட்சிக்குள்பட்ட தகடூர்ப் பகுதிகள் காணப்படுகின்றன என்றார் தொல்லியல் துறையின் உதவி இயக்குநர் (ஓய்வு) தி. சுப்பிரமணியன்.
தகடூர் ஒளவை அதியமான் பேரவை சார்பில் தருமபுரி அரசுக் கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் "தகடூர் வரலாறு' என்ற தலைப்பில் அவர் மேலும் பேசியது:
சுமார் 2.50 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் கிருஷ்ணகிரி பகுதியில் கிடைத்துள்ளன.  இனக் குழுக்களாக வாழ்ந்து வந்த மனிதர்கள் ஒவ்வொரு பகுதியிலும் கொடி,  கொத்து, மரபு,  கூம்பு என ரத்த உறவுகளாக - தனித்தனிக் குடிகளாக வாழ்ந்திருக்கிறார்கள்.
தற்போதைய தருமபுரி,  பாலக்கோடு பகுதிகளில் நீளமாகவும் வட்டமாகவும் உலைகள் அமைத்து இரும்புப் பொருள்கள் உற்பத்தி செய்துள்ளனர்.  பிற்காலத்தில் இரண்டு முறைகளையும் இணைத்து வசதியான ஒரு முறை உருவாக்கப்பட்டிருக்கிறது.
வத்தல்மலைப் பகுதியில் கல் ஆயுதங்கள் தயாரித்த ஆதாரங்கள் கிடைத்துள்ளன.  முள்ளிக்காடு பகுதியில் மனிதர்கள் வாழ்ந்த குகை கண்டறியப்பட்டுள்ளது.
பதுக்கை,  தாழி ஆகிய ஈமச் சின்னங்களின் சொற்கள் சங்கப் பாடல்களில் உள்ளன.  தமிழ்நாட்டில் இதுவரை கிடைத்துள்ள தொல்லியல் ஆதாரங்களில் 80 சதவிகித ஆதாரங்கள் பழைய தகடூர் பகுதிகளைச் சேர்ந்தவை.
 கிராமப் பகுதிகளில் 5 அல்லது 6 ஊர்களுக்கு ஒரு பகுதியில் பதுக்கைகள்,  கல் வட்டங்கள் காணப்படுகின்றன.  இதுபோன்ற ஈமச்சின்னங்களை பிரான்ஸ் நாட்டில் பாதுகாத்து வருகின்றனர்.  இங்கே அவை அழிந்து வருகின்றன.
ஏழு குடிகளை வென்று அதியர் மன்னராகப் பொறுப்பேற்றுக் கொண்டதாக சங்கப் பாடல் ஒன்றில் கூறப்பட்டுள்ளது.  சங்க கால அதியர்,  இடைக்கால அதியர், பிற்கால அதியர் என அதியமான் பரம்பரை பிரிக்கப்படுகிறது. 
கோட்டை கோயில்,  கம்பைநல்லூர் கோயில் ஆகியவை பிற்கால அதியர்கள் புதுப்பித்தவை என்பதற்கான ஆதாரங்கள் கிட்டியுள்ளன.  பல்லவர் காலக் குடவரைக் கோயில்களைப் போலவே,  அதியர்களும் நாமக்கல் மலையில் குடவரைக் கோயில் அமைத்துள்ளனர்.
மூன்று (காவிரி, பாலாறு, தென்பெண்ணை) ஆறுகளுக்குள்பட்ட பகுதிகளை அதியமான்களுள் முக்கியமான விடுகாதழகிய பெருமாள் ஆண்டதாகவும் குறிப்புகள் கிடைத்துள்ளன.
தாமரை மலரைப் போல சுற்றிலும் மலைகள் சூழ்ந்து நடுப்பகுதியான மொட்டு போன்ற சமதளப் பரப்பில் தகடூர் தலைநகரம் இருந்திருக்கிறது.  அது தற்போதுள்ள தருமபுரி நகரமாக இருக்க வாய்ப்பில்லை.  இதன்படி, 10 இடங்களில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டு,  "மோதூர்' என்ற பகுதியில் அந்த தகடூர்த் தலைநகர் அமைந்திருக்கலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.
மோதூர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில்,  தற்போது பெண்கள் அணியும் வளையல்கள்,  காதணிகள் அந்தக் காலத்திலேயே மண்ணால் வகை வகையாக செய்யப்பட்டவை கிடைத்திருக்கின்றன.  உள்பகுதி கருப்பாகவும், வெளியே சிவப்பாகவும் இருக்கும் மட்கலன்களும் கிடைத்திருக்கின்றன.  அந்த மட்கலன்களில் அக் கால மொழியாக கோடுகள் வரையப்பட்டிருக்கின்றன.
கிபி 4, 5 ஆவது நூற்றாண்டுகளில் தகடூர் என்றழைக்கப்பட்ட பகுதிகள் கி.பி. 800ஆம் ஆண்டுகளில் நுளம்பபாடி என்றும்,  கி.பி. 1300 ஆவது ஆண்டுகளில் தரும துவாராபுரி என்றும் அழைக்கப்பட்டிருக்கிறது. காலப்போக்கில் இந்தப் பெயர் திரிந்து தருமபுரி ஆகியிருக்கிறது என்றார் சுப்பிரமணியன்.
கருத்தரங்குக்கு கல்லூரி முதல்வர் சி. ஹேமா தலைமை வகித்தார். பேரவையின் தலைவர் பேராசிரியர் சி. சீனிவாசன்,  துணைத் தலைவர் பேராசிரியர் இ.பி. பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக, வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியர் சி. சந்திரசேகர் வரவேற்றார். முடிவில் பேரவையின் செயலர் சி. ராஜசேகரன் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com