குமாரசாமிபேட்டை ரயில்வே மேம்பாலத்தில்  மின் விளக்குகள் பொருத்துவது எப்போது?

தருமபுரி குமாரசாமிபேட்டை ரயில்வே மேம்பாலத்தில் மின் விளக்குகள் பொருத்தும் பணி எப்போது மேற்கொள்ளப்படும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

தருமபுரி குமாரசாமிபேட்டை ரயில்வே மேம்பாலத்தில் மின் விளக்குகள் பொருத்தும் பணி எப்போது மேற்கொள்ளப்படும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
தருமபுரியிலிருந்து பென்னாகரம் ஒகேனக்கல் செல்லும் சாலையில் நகரத்தையொட்டியுள்ள குமாரசாமிபேட்டையில் ரயில் பாதை கடந்து செல்கிறது. இச் சாலை வழியே ரயில்கள் கடக்கும்போது நெடுஞ்சாலையில் வாகனங்கள் நுழையும் பகுதியில் இருபுறமும் கதவுகள் அடைக்கப்படுவதால்,  ஏற்பட்டு வந்த நெரிசலை தவிர்க்கும் வகையில் இங்கு ரயில்வே மேம்பாலம் சுமார் ரூ. 22 கோடி மதிப்பில் சுமார் 600 மீட்டர் தொலைவுக்கு கட்டப்பட்டது. 
கடந்த சில ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வந்த இப் பாலம் அமைக்கும் பணிகள் நிறைவுற்ற நிலையில்,  கடந்த சில மாதங்களுக்கு முன் இந்த பாலம் போக்குவரத்து பயன்பாட்டுக்காகத்  திறக்கப்பட்டது.  இருப்பினும்,  இந்தப் பாலத்தின் இருபுறமும் மின் விளக்குகள் பொருத்தப்படவில்லை.  இது குறித்து, பாலம் திறப்பு விழாவில், அப் பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.  அப்போது விளக்குகள் பொருத்தப்படும் என உறுதியளிக்கப்பட்டது. 
     எனினும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட வில்லை.  பிரதான சுற்றுலாத் தலமான ஒகேனக்கல் காவிரிக்கு செல்லும் நெடுஞ்சாலை என்பதால்,  எந்த நேரமும் போக்குவரத்து அதிக அளவில் காணப்படும் இந்த மேம்பாலத்தில்,  மின் விளக்குகள் இல்லாததால், இரவு நேரத்தில் பாலத்தை கடந்து செல்ல வாகன ஓட்டிகளுக்கு சிரமமாக உள்ளது.  குறிப்பாக,  இரு சக்கர வாகனங்களில் இப் பாலத்தைக் கடந்து செல்வோருக்கு போதிய வெளிச்சமின்மையால்,  அதிக சிரமத்துடன் கடக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.  அதேபோல, புதியதாக வாகனங்களில் வரும் சுற்றுலாப் பயணிகளும் வெளிச்சம் இன்மையால் தவிப்புக்குள்ளாகின்றனர்.  இதனால், விபத்துகள் நிகழ வாய்ப்புள்ளதாக வாகன ஓட்டிகள் கருதுகின்றனர். எனவே, தருமபுரி குமாரசாமிபேட்டை ரயில்வே மேம்பாலத்தில், வாகன ஓட்டிகளின் நலன் கருதி, விபத்துகள் நிகழாமல் தவிர்க்கவும்,  இருபுறமும் மின் விளக்குகள் பொருத்த சம்பந்தப்பட்ட துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்துத் தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com