கிருஷ்ணகிரியில் அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குறு அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள் பணிகளுக்கு ஆக.24-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குறு அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள் பணிகளுக்கு ஆக.24-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ளிக்கிழமை வெளியான செய்தி: கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், 377 குறு அங்கன்வாடி பணியாளர்கள், 391 உதவியாளர் பணியிடங்களுக்கு இன சூழற்சி முறையில் நேர்முகத் தேர்வு மூலம் நேரடி நியமனத்துக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 குறு அங்கன்வாடி பணியாளர்கள் விண்ணப்பிக்க 1.7.2017 அன்று 25 வயது நிறைந்தவராகவும், 35 வயதுக்கு மிகாமல் உள்ளவராகவும் இருக்க வேண்டும்.
 கணவனை இழந்தவர்கள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், மலைப் பகுதியில் வசிப்பவர்களுக்கு அதிகபட்ச வயது 40 எனவும், கல்வித் தகுதி 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதர இனங்களுக்கு 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
 அங்கன்வாடி உதவியாளர் பணிக்கு 20 முதல் 40 வயது வரை இருக்க வேண்டும். அதிகபட்ச வயதான 40 வயதிலிருந்து 5 ஆண்டுகள் கூடுதலாக கணவனை இழந்தவர்கள், கணவனால் கைவிடப்பட்டவர்கள் மற்றும் மலைப் பகுதியில் வசிப்பவர்களுக்கு நீடித்து வழங்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பதாரர்கள் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். மேலும், இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள், அதே கிராமத்தைச் சார்ந்தவராக இருத்தல் வேண்டும். தகுதியான நபர் இல்லாவிடில், அதே கிராம ஊராட்சியைச் சேர்ந்த அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் தேர்ந்தெடுக்கப்படுவர்.
 கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளில், அங்கன்வாடி மையத்தில் பயிலும் 6 வயதுக்குள்பட்ட குழந்தைகளை கையாளும் திறனுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு 4 சதவீத இடஒதுக்கீட்டின்படி பணி வழங்கப்படும். தகுதிவாய்ந்த மாற்றுத் திறனாளி விண்ணப்பதாரர்களுக்கு வயது உச்சவரம்பு 3 ஆண்டுகள் தளர்வு செய்து காலி பணியிடங்கள் நிரப்பப்படும்.
 விண்ணப்பத்துடன், வாக்காளர் அடையாள அட்டை, வீட்டு வரி ரசீது, மின்கட்டண ரசீது, குடும்ப அட்டை, ஆதார் அட்டை இதில் ஏதேனும் ஒரு சான்றை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். இத்துடன் சான்றொப்பம் இடப்பட்ட கல்வி மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், வட்டாட்சியரால் வழங்கப்பட்ட ஜாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், வருமான சான்று, விதவை, கணவரால் கைவிடப்பட்டவர், மாற்றுத் திறனாளி எனில் அதற்கான சான்று இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
 விண்ணப்பங்களை அந்தந்தப் பகுதியில் உள்ள குழந்தை வளர்ச்சித் திட்டஅலுவலகங்களில் பெற்றுக்கொள்ளலாம். பணிகோரும் இடத்தினை குறிப்பிட்டு, உரிய விண்ணப்பப் படிவத்தை அக.24-ஆம் தேதி நண்பகல் 12 மணிக்குள் சம்பந்தப்பட்ட வட்டார குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com