ஜிஎஸ்டி சந்தேகங்களுக்கு பதிலளிக்க 19 சேவா மையங்கள் திறப்பு

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) குறித்து சிறு மற்றும் குறுந்தொழில் அதிபர்கள், சிறிய மற்றும் பெரிய வணிகர்கள் சேவை நிறுவனங்களுக்கு

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) குறித்து சிறு மற்றும் குறுந்தொழில் அதிபர்கள், சிறிய மற்றும் பெரிய வணிகர்கள் சேவை நிறுவனங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை தெளிவுபடுத்தும் வகையில், மத்திய அரசு சார்பில் சேலம் கோட்டத்தில் 19 சேவா கேந்திர மையங்கள் தொடங்கப்பட்டுள்ளதாக சேலம் சரக்கு மற்றும் சேவை வரி ஆணையர் கண்ணன் தெரிவித்தார்.
 ஒசூரில் சரக்கு மற்றும் சேவை வரி குறித்த விழிப்புணர்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட பிறகு சேலம் கோட்ட சரக்கு மற்றும் சேவைகள் வரி ஆணையர் கண்ணன் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழகத்தில் அதிகளவில் தொழில் வளர்ச்சி அடைந்து வரும் பகுதியாக ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, ஒசூர் ஆகியவை விளங்கி வருகின்றன.
 தற்போது மத்திய அரசு அமல்படுத்தியுள்ள ஜிஎஸ்டி குறித்து பொதுமக்கள், வியாபாரிகள், தொழில் நிறுவனங்கள் மற்றும் சேவை நிறுவனங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை தீர்க்கும் வகையில், சேலம் கோட்டத்தில் 19 சேவா கேந்திரா மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. மக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை அந்தந்தப் பகுதியில் உள்ள சேவா கேந்திர மையங்களில் சென்று தெளிவு பெறலாம் என்றார்.
 இந்தக் கூட்டத்தில் பேசிய ஹோஸ்டியா சங்கத்தின் தலைவர் வி.ஞானசேகரன், ஒசூரில் உள்ள சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்கள் இதுவரை 17.5 சதவீதம் வரியில் கச்சாப் பொருள்களை வாங்கி, அதனை வாகன உதிரி பாகங்களாக உற்பத்தி செய்து 17.5 சதவீதத்தில் விற்பனை செய்து வந்தன. ஆனால், ஜிஎஸ்டி-யில் வாங்கும் கச்சா பொருள்களை 18 சதவீதத்தில் வாங்கி விற்பனை செய்யும் போது, 28 சதவீத வரி செலுத்த வேண்டும் என்பதால், கூடுதல் மூலதனம் தேவைப்படும்.
 இதனால், ஏற்கெனவே பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு மேலும் சிக்கல் ஏற்படும். மேலும், கர்நாடக மாநில எல்லையில் உள்ள ஒசூரில் பெங்களூரில் இருந்து ஜாப் ஒர்க் செய்வதற்கு வரி அமல்படுத்தப்பட்டுள்ளதால், சிறு தொழிலில் பாதிப்பு ஏற்படுத்தும் என்றார்.
 இதில் சரக்கு மற்றும் சேவை வரி உதவி ஆணையர்கள் நவுசத், அசோக்ராஜ், அமர்சிங், சம்பத், கண்காணிப்பாளர்கள் ஆறுமுகம், கிருஷ்ணன், சாந்தகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com