கே.ஆர்.பி. அணை மதகு விவகாரம்: ஜி.கே.மணி தலைமையில் பாமக ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி அணையின் பிரதான மதகு சேதமடைந்ததைக் கண்டித்து, பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் கிருஷ்ணகிரியில் வியாழக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி அணையின் பிரதான மதகு சேதமடைந்ததைக் கண்டித்து, பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் கிருஷ்ணகிரியில் வியாழக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 கிருஷ்ணகிரி அணையின் பிரதான மதகுகளில் முதல் எண் கொண்ட மதகு சேதமடைந்ததற்கு, அணையை அலுவலர்கள் முறையாக பராமரிக்காததே காரணம் எனக் கூறி, கிருஷ்ணகிரி புறநகர் பேருந்து நிலையம் அருகே பா.ம.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 ஆர்ப்பாட்டத்துக்கு, அந்தக் கட்சியின் மாநில துணை பொதுச் செயலர் சுப.குமார் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் மேகநாதன், மத்திய மாவட்டச் செயலர் அர்ச்சுனன், வன்னியர் சங்க மாநில துணைத் தலைவர் கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஜி.கே.மணி பேசியது: கிருஷ்ணகிரி அணை மக்களின் வாழ்வாதாரமாக உள்ள கிருஷ்ணகிரி அணையின் பிரதான மதகு சேதமடைந்ததால், அணையில் தேக்கி வைக்கப்பட்டிருந்த தண்ணீர் வீணாகி உள்ளது.
 இதனால், 12 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு நிலம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், குடிநீர்ப் பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ளது. தமிழக அரசுக்கு கிருஷ்ணகிரி அணை குறித்து போதிய அக்கறை இல்லை.
 தலைக்கவசம் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகள் மீது வழக்குப் பதிவு செய்யும் இந்த அரசு, மதகு சேதமடைந்ததற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
 மதகு சேதமடைந்த பகுதியில் தாற்காலிகமாக மதகை அமைத்து, சேமித்து வைக்கப்பட்ட தண்ணீர் வீணாகாமல் தடுத்திருக்கலாம். அணை சேதம் அடைந்தது குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றார்.
 ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் தமிழக அரசுக்கு எதிராகவும், அணையை முறையாகப் பராமரிக்காத அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர்.
 முன்னதாக, கிருஷ்ணகிரி அருகே உள்ள பெரிய ஏரி, கிருஷ்ணகிரி அணையில் சேதமடைந்த பிரதான மதகுப் பகுதி ஆகியவற்றை ஜி.கே.மணி பார்வையிட்டார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com