ரஜினி அரசியலுக்கு வருவதற்கான வழி இன்னும் வரவில்லை: சத்திய நாராயண ராவ்

ரஜினி அரசியலுக்கு வருவதற்கான வழி இன்னும் வரவில்லை: சத்திய நாராயண ராவ்

கொஞ்சம் பொறுமையாக இருங்கள். அரசியலுக்கு வரும் ஆசை அவருக்கு உள்ளது. ஆனால்...

நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவதற்கான வழி இன்னும் வரவில்லை என்று அவரது சகோதரர் சத்தியநாராயண ராவ் தெரிவித்தார்.

கிருஷ்ணகிரியில் நடிகர் ரஜினி காந்தின் 68 -ஆவது பிறந்த நாள் விழா, கிருஷ்ணகிரி மாவட்ட தலைமை ரஜினி காந்த் ரசிகர் மன்றம் சார்பில் திங்கள்கிழமை நடைபெற்றது. ரசிகர் மன்றத்தின் மாவட்டத் தலைவரும், தொழில் அதிபருமான மதியழகன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக ரஜினி காந்தின் சகோதரர் சத்திய நாராயண ராவ் கலந்து கொண்டு டெங்கு காய்ச்சல் தடுப்புப் பணியில் ஈடுபட்ட துப்புரவுத் தொழிலாளர்களுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.

அப்போது அவர் பேசியது: தமிழ்நாடு முழுவதும் ரஜினி பிறந்த நாளை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் மீது தமிழக மக்கள் அன்பும், பாசமும் வைத்திருக்கிறார்கள். கிருஷ்ணகிரி அருகேயுள்ள நாச்சிகுப்பம் கிராமத்தில் எனது பெற்றோர் பிறந்தனர். தற்போதும் எனது உறவினர்கள் அந்தக் கிராமத்தில் வசித்து வருகின்றனர். 

துப்புரவுத் தொழிலாளர்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்குவது சந்தோஷம் அளிக்கிறது. உங்கள் குழந்தைகளை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும். அவர்கள் உயர் பதவிகளுக்குச் செல்ல வேண்டும். துப்புரவுப் பணியின் போது, தொழிலாளர்கள் பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்த வேண்டும். ரஜினி காந்துக்கு எந்த விதமான ஆசையும் கிடையாது. நீங்கள் எல்லாத்தையும் அவருக்கு கொடுத்துள்ளீர்கள். மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பது அவரது ஆசை. அவர், எந்த விதத்தில் செய்வார் என்பது தெரியாது என்றார். 

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: ரஜினி காந்தின் அரசியல் பிரவேசம் குறித்து அவரே தெரிவிப்பார். அதுகுறித்து நான் ஏதும் தெரிவிக்க இயலாது. அவர் அரசியலுக்கு வந்தால் மகிழ்ச்சி. தற்போதுதான் ரசிகர்களுடன் புகைப்படம் எடுக்கும் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. கொஞ்சம் பொறுமையாக இருங்கள். அரசியலுக்கு வரும் ஆசை அவருக்கு உள்ளது. ஆனால், அதற்கான வழி இன்னும் வரவில்லை என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com