அரசுப் பணியாளர்கள் உண்ணாவிரதம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தையே தொடர வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் அரசுப் பணியாளர் சங்கங்களின்

பழைய ஓய்வூதியத் திட்டத்தையே தொடர வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் அரசுப் பணியாளர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
 மாவட்ட அமைப்பாளர் ஒய். இம்ரான் ஷெரீப் தலைமை வகித்தார். ஊராட்சிப் பணியாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் கே. கிருஷ்ணன் தொடங்கி வைத்தார். அங்கன்வாடி பணியாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ். சுகமதி, நியாய விலைக் கடைப் பணியாளர் சங்கத்தின் மாவட்டச் செயலர் பி. கோவிந்தராஜ் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
 உண்ணாவிரதத்தில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகள்: 21 மாத ஊதியக் குழு நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தையே தொடர வேண்டும்.
 ஓய்வூதியம் இல்லாத பணியாளர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். நிரந்தர ஊதிய விகிதம் இல்லாத பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் மற்றும் கால முறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதம் நடைபெற்றது.
 கிருஷ்ணகிரியில்... கிருஷ்ணகிரியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் உண்ணாவிரதப் போராட்டம், செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
 கிருஷ்ணகிரி புறநகர்ப் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற போராட்டத்துக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் உமாசங்கர் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடைப் பணியாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் சோமேஸ்வரன், தமிழ்நாடு அரசு சாலைப் பணியாளர்கள் சங்க மாநில பொதுச்செயலர் மாது உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 ஊதியக்குழு நிலுவைத் தொகையை 1.1.2016 முதல் உடன் வழங்க வேண்டும். மத்திய அரசுப் பணியாளர்களுக்கு இணையாக அனைத்து படிகளையும் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். அரசுப் பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். மக்கள் தொகை அடிப்படையிலும், வருமானத்தின் அடிப்படையிலும் ஊராட்சிகளை பேரூராட்சிகளாக தரம் உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com