வறட்சி எதிரொலி: கால்நடைகளை விற்கும் விவசாயிகள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வறட்சியின் காரணமாக கால்நடைகளை விற்கும் அவல நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
வறட்சி எதிரொலி: கால்நடைகளை விற்கும் விவசாயிகள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வறட்சியின் காரணமாக கால்நடைகளை விற்கும் அவல நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாயம் முக்கியத் தொழிலாகும். இங்கு வேளாண்மை, தோட்டக் கலைப் பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு கூடுதலாக 29 சதவீதம் மழை பெய்தாலும், 2016-ஆம் ஆண்டு சராசரி மழையைக் காட்டிலும் 28 சதவீதம் குறைவாகவே மழை பெய்தது. இதனால் பெருமளவு விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.

குறைந்த விவசாயப் பரப்பளவு
 கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நெல், சிறு தானியங்கள், பயறு வகைகள், பருத்தி, கரும்பு, எண்ணெய் வித்துகள் இயல்பான பரப்பளவு 1,72,018 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. இந்த நிலையில், 2016-17-ஆம் ஆண்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1,80,860 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், பருவ மழை பொய்த்த நிலையில், 2016-ஆம் ஆண்டில் 1,09,794 ஹெக்டேர் பரப்பளவாகக் குறைந்தது. அதேபோல், தோட்டக் கலைப் பயிர்கள் கடந்த 2015-16-ஆம் ஆண்டில் 2,13,748 ஹெக்டேர் பரப்பளவில் இருந்த சாகுபடியானது, பருவமழை பொய்த்ததால் 1,81,527 ஹெக்டேர் பரப்பளவாக குறைந்தது என தோட்டக் கலைத் துறையின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விளைச்சல் மிகவும் குறைந்தது.
கால்நடைகள் விற்பனை அதிகரிப்பு:
 இதனால், வருவாய் இழந்து இழப்பைச் சந்தித்த விவசாயிகள், தாங்கள் வளர்க்கும் கால்நடைகளை விற்கும் நெருக்கடியான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் போச்சம்பள்ளி, குருபரப்பள்ளி உள்ளிட்ட சந்தைகளில் கால்நடைகள் விற்கும் எண்ணிக்கை கடந்த ஆண்டைக் காட்டிலும் 30 சதவீதம் அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
 கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ள உலகம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மாதேஷ் (25) கூறுகையில், போதிய மழை இல்லாததால், விவசாயத்தில் இழப்பு ஏற்பட்டுள்ளது. தண்ணீர் இல்லை, தீவனமும் இல்லை. அவ்வாறு கடைகளில் தீவனம் கிடைத்தாலும் அதிக விலைக்கு விற்கப்படுவதால், கால்நடைகளை வளர்க்க இயலாத நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் தான் வளர்க்கும் 4 மாடுகளில் 3 மாடுகளை விற்க சந்தைக்கு வந்துள்ளதாகவும், ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள மாடுகள் ரூ.7 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை குறைந்த விலைக்கே போவதாகவும் அவர் வருத்தத்துடன் தெரிவித்தார்.

ஆம்பூரைச் சேர்ந்த வியாபாரி சீனிவாசன் (42) கூறுகையில், தற்போது சந்தைகளில் கறவை மாடுகள், காளைகள், ஆடுகள், கோழிகள் ஆகியவற்றின் விற்பனை கடந்த ஆண்டைக் காட்டிலும் அதிகமாக உள்ளது. கடந்தாண்டு ரூ.20 ஆயிரம் விலை போன கறவை மாட்டின் விலை இந்த ஆண்டு ரூ.10 ஆயிரமாக உள்ளது. சந்தையில் விற்பனை செய்யப்படும் மாடுகளில் 75 சதவீதம் இறைச்சிக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன என்றார்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவியபோதும், விவசாயிகளுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக கால்நடைகளின் வருவாய் இருந்தது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் விவசாயிகள் உயிரிழந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இத்தகைய நிலை இல்லை. இருந்தபோதிலும், இங்கு கால்நடைகள் விற்கும் எண்ணிக்கை அதிகரித்து வருவது அதிர்ச்சி அளிக்கக் கூடியதாக உள்ளது.

எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கால்நடைகளின் விற்பனையைத் தடுக்கும் வகையிலும், விவசாயிகளிடம் நம்பிக்கையை ஏற்படும் வகையிலும் தீவனங்கள் குறைந்த விலையில் கிடைக்கவும், தீவனங்களின் உற்பத்தியை அதிகரிக்கவும் சம்பந்தப்பட்ட துறையினர் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com