நலத்திட்ட உதவி: உலமாக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு

சிறுபான்மையினர் நலத் துறை மூலம் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரிய உறுப்பினர்கள் நலத்திட்ட உதவிகள் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

சிறுபான்மையினர் நலத் துறை மூலம் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரிய உறுப்பினர்கள் நலத்திட்ட உதவிகள் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
 இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிட்ட செய்தி: சிறுபான்மையினர் நலத் துறை மூலம் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரிய உறுப்பினர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, விபத்து ஈட்டுறுதி திட்டத்தின் கீழ் விபத்தால் மரணம் ஏற்பட்டால் உதவித் தொகையாக ரூ.1 லட்சமும், ஊனம் ஏற்பட்டால் ஊனத்தின் தன்மைக்கேற்ப ரூ.10 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரையிலும், இயற்கை மரண உதவித்தொகையாக ரூ.15 ஆயிரமும், ஈமச்சடங்கு செலவு உதவித்தொகையாக ரூ. 2 ஆயிரமும் வழங்கப்படுகிறது.
மேலும், கல்வி உதவித்தொகை திட்டத்தின்கீழ் 10-ஆம் வகுப்பு படித்து வரும் பெண் குழந்தைகள், 10-ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்றவர்கள், 11-ஆம் வகுப்பு படித்து வரும் பெண் குழந்தைகளுக்கு ரூ.ஆயிரமும், 12-ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்றவர்கள், முறையான பட்டப்படிப்பு படித்து வருபவர்களுக்கு ரூ.1,500-ம், மாணவர் இல்ல வசதியுடன் கூடிய முறையான படிப்புக்கு ரூ.1,750-ம், முறையான பட்ட மேற்படிப்புக்கு ரூ.4 ஆயிரமும், மாணவர் இல்ல வசதியுடன் முறையான பட்ட மேற்படிப்புக்கு ரூ.5 ஆயிரமும், தொழிற்கல்வி பட்டப்படிப்புக்கு ரூ.4 ஆயிரமும், மாணவர் இல்ல வசதியுடன் கூடிய தொழிற்கல்வி பட்டப்படிப்புக்கு ரூ.6 ஆயிரமும் வழங்கப்படுகிறது.
 இதேபோல தொழிற்கல்வி பட்ட மேற்படிப்புக்கு ரூ.8 ஆயிரம், ஐ.டி.ஐ. அல்லது தொழிற்பயிற்சி படிப்புக்கு ரூ.ஆயிரம், மாணவர் இல்ல வசதியுடன் கூடிய ஐ.டி.ஐ. அல்லது பல்தொழில் பயிற்சி படிப்புக்கு ரூ.1,200, திருமண உதவித்தொகையாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது. மேலும், மகப்பேறு உதவித்தொகையாக மாதம் ரூ.ஆயிரம் வீதம் 6 மாதங்களுக்கு ரூ.6 ஆயிரம், கருச்சிதைவு அல்லது கருக்கலைப்புக்கு ரூ.3 ஆயிரம், மூக்குக் கண்ணாடி செலவுத் தொகையை ஈடு செய்வதற்காக (அதிகபட்சம்) ரூ.500, முதியோர் ஓய்வூதியமாக மாதந்தோறும் ரூ.ஆயிரம் வழங்கப்படுகிறது.
 எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் உள்ள உறுப்பினர்கள் இந்த நலத்திட்ட உதவிகள் பெற விண்ணப்பித்து, பயனடையுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com